நான் கலங்க மாட்டேன்; ஐ.ஏ.எஸ் படித்த எனது மகன்கள் மகள்கள் இருக்கிறார்கள் - சைதை துரைசாமி உருக்கம்
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் காலமானதை அடுத்து அவரது உடல் இன்று அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சைதை துரைசாமி, “ நான் கலங்கமாட்டேன். எனக்கு சென்னையில் ஐ.ஏ.எஸ் மகன்கள், மகள்கள் உள்ளனர். எனக்கு ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என மிகவும் உருக்கமாக பேசினார். இந்த காட்சியைப் பார்த்த அங்கிருந்த அனைவரும் கண்கலங்கி நின்றனர்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், தமிழ் சினிமாவின் இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்கள் தொடர் தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டு இன்று சென்னை கொண்டுவரப்பட்டது.
இமாச்சல பிரதேசத்துக்கு தனது சொந்த வேலைக்காகச் சென்றிருந்த வெற்றி துரைசாமி அங்கு ஏற்பட்ட விபத்தினால், அவர் சென்ற கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர தஞ்ஜின் இறந்தார். உடன் சென்ற கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காணாமல் போன வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, 8 நாட்களுக்கு பின்னர் வெற்றி துரைசாமியின் உடல் விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று அதாவது பிப்ரவரி 13 மாலை சென்னை கொண்டு வரப்பட்டது.
சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
வெற்றி துரைசாமி உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவரும் மாநிலஙகளவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர், சசிகலா, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சைதை துரைசாமி நடத்தும் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் படிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.