சொத்து பரிமாற்றம் ; முத்திரை தீர்வை சலுகை யாருக்கு ? புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
சிறப்பு பொருளாதார மண்டல வளாகங்களில் நடக்கும் சொத்து பரிமாற்றங்களை பதிவு செய்யும் போது, முத்திரை தீர்வை சலுகையை பயன்படுத்த பதிவுத்துறை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

சிறப்பு பொருளாதார மண்டல சலுகைகள்
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களை ஏற்படுத்த, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய வளாகங்களில் நிலம், கட்டடம் விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்ய, முத்திரை தீர்வை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வளாகங்களில், முத்திரை தீர்வை சலுகையை பயன்படுத்துவதில் சர்ச்சை ஏற்பட்டது. குறிப்பாக, இங்கு குடியிருப்பு பயன்பாட்டுக்கான கட்டடங்கள் விற்பனைக்கும் , இந்த சலுகை பொருந்துமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பான ஒரு வழக்கில், உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதில் முத்திரை தீர்வை சலுகை எந்தெந்த பரிமாற்றங்களுக்கு பொருந்தும் என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவு ;
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான பத்திரங்கள், பதிவுக்கு தாக்கலாகும் போது அதில் அந்த சொத்து, உற்பத்தி பகுதியில் உள்ளதா அல்லது உற்பத்தி அல்லாத பகுதியில் உள்ளதா என்பதை தெளிவு படுத்தாவிட்டால், முத்திரை தீர்வை சலுகை வழங்கப்படாது. கைமாறும் சொத்து , சிறப்பு பொருளாதார மண்டலத்தின் அடிப்படை நோக்கத்தில் தொடர்புடையதாக இருந்தால், முத்திரை தீர்வை சலுகை வழங்கலாம்.
பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்தில், தொழிலக கட்டடம், இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்தால், முத்திரை தீர்வை சலுகை கிடைக்கும். உற்பத்தி சாராத பகுதியை சேர்ந்த நிலம், கட்டடம் என்றால், அதன் பரிமாற்றம் தொடர்பான பத்திரங்களுக்கு முத்திரை தீர்வை சலுகை பொருந்தாது. இத்தகைய சொத்துகள் தொடர்பான பத்திரங்கள் தாக்கலாகும் போது, அதன் பயன்பாடு குறித்து அந்த சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சி ஆணையரின் சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















