Traffic Change: சென்னை மக்களுக்கு அறிவிப்பு.. வேகமெடுக்கும் மெட்ரோ பணி.. எந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் தெரியுமா?
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை போரூர், வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர் ஆகிய முக்கிய இடங்களை இணைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலையில், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் காவல்துறையினரும் திறமையாக கையாண்டு வருகின்றனர்.
இப்படியான நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வடபழனி முதல் கோடம்பாக்கம் வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று, பின் வலதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை 100 அடி சாலையை அடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் போரூர் செல்லும் வாகனங்கள் 100 அடி ரோடு சிக்னலை அடைந்தவுடன் P.T.ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை, வன்னியர் சாலை வழியாக வடபழனி - போரூர் வரையிலான ஆற்காடு சாலையை அடையலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம்
- கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் கோடம்பாக்கம் யுனைடெட் இந்திய காலனி 1வது பிரதான சாலையில் திரும்பி (மீனாட்சி கல்லூரிக்கு எதிர்புறம்) ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக சென்று அம்பேத்கர் சாலையை அடையலாம்.
- இதன் காரணமாக யுனைடெட் இந்தியா காலனி 1வது பிரதான சாலையில் ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் 2-வது குறுக்கு தெரு மற்றும் 2-வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.
- மேலும் விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தி.நகர் செல்ல ஸ்டேஷன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.
காவல்துறையில் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றமானது நாளை (மே 6) முதல் மே 12 ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.