![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bill to Appoint VC: பல்கலை. துணைவேந்தர் நியமனம் எப்படி?- மசோதாவால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
ஆளுநர் உரிமையைப் பறிக்கும் துணைவேந்தர்கள் நியமன மசோதாவுக்கு ஆளுநரிடமே ஒப்புதல் பெற அனுப்பப்பட உள்ளது.
![Bill to Appoint VC: பல்கலை. துணைவேந்தர் நியமனம் எப்படி?- மசோதாவால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? TN Assembly adopts bill empowering State to appoint Vice-Chancellors, not Governor Know more in Detail Bill to Appoint VC: பல்கலை. துணைவேந்தர் நியமனம் எப்படி?- மசோதாவால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/25/d3f02198256166c406217cb610f30445_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆளுநர் உரிமையைப் பறிக்கும் துணைவேந்தர்கள் நியமன மசோதாவுக்கு ஆளுநரிடமே ஒப்புதல் பெற அனுப்பப்பட உள்ளது. இந்த நிலையில் பல்கலைக்கழக மசோதாவில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மாநாடு இன்று (ஏப்.25) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை நடத்தி வரும் நிலையில், இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் மாநில அரசுக்கே அதிகாரம்
குஜராத்தில் தேடுதல் குழு நியமிக்கும் மூவரில் ஒருவரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக மாநில அரசு நியமிக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தேடுதல் குழு நியமிக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசின் ஒப்புதலோடு, ஆளுநர் நியமிக்கிறார். அந்த வகையில் தமிழ்நாடு அரசும் இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் மட்டுமே துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ள நிலையில், மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு உயர் கல்வித்துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களின் தலைமைச் செயல் அலுவலர் என்று கருதப்படும் துணை வேந்தர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
துணை வேந்தரை நியமிக்க தமிழக அரசின் உயர்கல்வித் துறையால்தேடல் குழு (Search Committee) ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிரதிநிதி என மூன்று பேர் இடம் பெறுவர். ஆளுநரின் பிரதிநிதி தேடல் குழுவின் தலைவராகச் செயல்படுவார். தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் இருந்து ஒருவரைத் தமிழக ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்த நடைமுறையின்படிதான் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் பல்கலைக்கழக சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், பல்கலைக்கழக சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்.
தற்போதைய நடைமுறை | திருத்தம் |
துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார். | மசோதா சட்டமான பிறகு, துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவைத் தமிழக அரசே நியமிக்கும். முதலில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். |
தேடுதல் குழு தேர்ந்தெடுத்து அளிக்கும் மூவரில் இருந்து ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுப்பார். | இனி தேடுதல் குழு தேர்ந்தெடுக்கும் நபர்களில் ஒருவரை மாநில அரசே தேர்ந்தெடுக்கும். |
துணை வேந்தர் மீது புகார் எழுந்தால் ஆளுநரே இறுதி முடிவு எடுப்பார். | உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். |
புகார் விவகாரத்தில் துணை வேந்தரை நீக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு உண்டு. | துணை வேந்தர் தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல வாய்ப்பு அளிக்கப்படும். |
துணைவேந்தர் நியமன முறை மாற்றப்பட்டாலும் இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சரே நீடிப்பார்.
பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர் - மாநில அரசுகள் இடையே மோதல் முற்றி வருகிறது. அந்த வகையில் ஆளுநர் பதவியே தேவையில்லை என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)