ராணிப்பேட்டை : 5 டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!
தென்னந்தியலம் உள்ளிட்ட ஐந்து அரசு டாஸ்மாக் கடைகளில் , பல லட்ச ரூபாய் மதிப்பிலான உயர் ரக சரக்குகளை திருடிய இந்த கும்பல் முள்வாடி மற்றும் கலவை பகுதிகளில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர் .
தமிழ் நாட்டில் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் ஒரு பகுதியாக தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த தென்னந்தியலம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் (கடை எண் 11368 ) கடையில் மர்ம நபர்கள் சுவரை துளையிட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர் .
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் இராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பூரணி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் இதே பாணியில் கொள்ளை அடிக்கப்பட்டதை அறிந்த எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா டிஎஸ்பி பூரணி தலைமையில் இரண்டு தனிப்படையை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ரத்தினகிரி அடுத்த பூட்டுத்தாக்கு அருகே இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு நபர் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஒன்றில் வந்தார். அவரை மடக்கிப் பிடித்தபோது அந்த மூட்டையில் உயர் ரக அரசு மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .
விசாரணையில் பிடிபட்டவர் வேலூர் மாவட்டம் வசூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்.(46) இவர் மீது பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் இவரது உறவினர்களான கலவை முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த சந்தானம்(26) ராம்தாஸ்(21) ஆகியோர் துணையோடு தென்னந்தியலம் அரசு டாஸ்மாக் கடையை துளையிட்டு உயர்ரக மதுபான பாட்டில்களை கொள்ளையடித்தது தெரியவந்தது. தென்னந்தியலம் மட்டுமில்லாமல் , மார்ச் மாதம் சேர்காட்டில் நடந்த டாஸ்மாக் கடை திருட்டிலும், வேலூர் மாவட்டம் கசத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் தொடர்ந்து இருமுறை நடத்த திருட்டிலும் , ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் காவேரிப்பாக்கம் மட்டும் திமிரியில் நடந்த கொள்ளைகளிலும் இந்த மூன்று நபர்கள்தான் கொள்ளை அடித்தனர் என்பதை போலீசார் உறுதி செய்தனர் .
போலீஸிடம் சிக்கியது எப்படி :
தென்னந்தியலம் உள்ளிட்ட ஐந்து அரசு டாஸ்மாக் கடைகளில் , பல லட்ச ரூபாய் மதிப்பிலான உயர்ரக சரக்குகளை திருடிய இந்த கும்பல் முள்வாடிமற்றும் கலவை பகுதிகளில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். இதனிடையில் , தமிழ் நாடு அரசு வரும் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும் என்று தெரிவித்ததை அடுத்து, கலக்கம் அடைந்த இந்த கும்பல் , கொள்ளை அடித்த மதுபட்டல்களை , டாஸ்மாக் விலையை விட குறைவான விலைக்கு விற்கத்தொடங்கி உள்ளனர் . இதுகுறித்த தகவல் அறிந்த தனிப்படை போலீசார் இந்த மூவர் கும்பலை கண்காணித்து வந்துள்ளது .
இந்நிலையில் தான் , இந்த மூவர் கும்பல் வெள்ளிக்கிழமை அன்று , 2 லட்ச ருபாய் மதிப்பிலான சொகுசு பைக் ஒன்றை இன்ஸ்டால்மெண்ட் ஏதும் இல்லாமல் , முழு பணத்தை கட்டி வாங்கியுள்ளதை பற்றி கேள்விப்பட்ட போலீசார், மணிகண்டனை முதலில் கையும் களவுமாக பிடித்து அவர் கொடுத்த தகவல் மூலம் மீதமுள்ள இருவரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய புதிய சொகுசு இருசக்கர வாகனம் உற்பட மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான உயர்ரக மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவர் மீதும் ரத்தினகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , தீவிர விசாரணை நடந்துவருகிறது .