Safest metro city: நாட்டிற்கே முன்னோடி - பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரம் சென்னை - ஆய்வில் தகவல்
safest metro city: இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரங்களுக்கான பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
safest metro city: பல்வேறு காரணிகள் அடிப்படையில் தேசிய அளவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கை:
கூகுள் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக உள்ள லேடன் அடமோவிக், செர்பியா நாட்டின் போஸ்னியா-ஹெர்சகோவினா பகுதியில் உள்ள பஞ்ஜா லூகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அதோடு, அந்த நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'நம்பியோ' என்ற நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். அந்த நிறுவனமானது பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும், உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதுதொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னைக்கு முதலிடம்:
அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், பாதுகாபான மெட்ரோ நகரங்களுக்கான பட்டியலில் இந்திய அளவில் சென்னை மாநகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், சர்வதேச அளவில் பார்க்கும்போது சென்னை 127வது இடத்தில் உள்ளது. அதைதொடர்ந்து மேலும் 3 நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, மும்பை 161வது இடத்திலும், கொல்கத்தா 174வது இடத்திலும், டெல்லி 263வது இடத்திலும் உள்ளது.
தொடரும் அங்கீகாரம்:
முன்னதாக நடப்பாண்டு தொடக்கத்தில் அவதார் எனப்படும் திறமை உத்தி ஆலோசானை நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. எளிமையான வாழ்வு, பாதுகாப்பு, பெண்களின் பிரதிநிதித்துவ விகிதம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சிகள் உள்ளிட்ட 5 அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களின் பட்டியலில், 78.4 புள்ளிகளுடன் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து செர்பிய நாட்டைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்விலும் தேசிய அளவில் சென்னை முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
காவல்துறை மகிழ்ச்சி:
ஆய்வறிக்கை தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மாநக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், “ சென்னை மாநகராட்சியை அதன் குடிமக்களுக்கு இன்னும் பாதுகாப்பானதாக மாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக தொடர்ந்து கடினமாக உழைக்கப் போகிறோம். மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த காவல்துறை தன்னை அர்ப்பணித்துள்ளது” என கூறினார். பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் நாட்டிலேயே தமிழ்நாட்டில், குறைவாக பதிவாவது மாநிலத்தின் வளர்ச்சியை குறிப்பதாக பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.