'எல்லாருக்கும் நன்றி ' விருந்து வழங்கும் விஜய்.. பின்னணி என்ன ?
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற, நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இன்று விஜய் விருந்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அதில் பேசிய விஜய் திமுகவை தனது அரசியல் எதிரியாக அறிவித்ததோடு, 2026ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வோம் எனவும் சூளுரைத்தார். அதோடு, தங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால், ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்து சலசலப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் தகவல் தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டை நடத்த போராட்டம்
முதலில் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்த பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் இடம் தேர்வு செய்வது தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடைபெற்று முடிந்தது.
மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு முக்கிய காரணமாக நிலம் கொடுத்தபவர்கள் இருந்து வந்தனர். அவர்கள் தங்களது விவசாய நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் நிலத்தை மாநாடு நடத்த கொடுக்காமல் இருந்திருந்தால் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறுவதும் தள்ளிப் போய் இருக்கலாம். எனவே அவர்களை பாராட்ட வேண்டும் அவர்களுக்கான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என விஜய் முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
விருந்து வழங்கும் விஜய்
இந்தநிலையில், கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், இன்று விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விருந்தில் நில உரிமையாளர்கள், விவசாயிகள் அவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது. கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு இடம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்துக்கு அக்கட்சி தலைவர் விஜய் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் சார்பில் நிலம் கொடுத்து உதவிய விவசாய தம்பதிக்கு கரவை மாடு வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.