Tvk Vijay: "என் காதிற்கு அந்த தகவல் வருது" - மாவட்ட செயலாளர்களுடன் விஜய் பேசியது என்ன?
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் இரண்டாம் கட்டமாக இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில், அடுத்த வருடம் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியை பணியை வேகப்படுத்தும் வகையில், கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் விஜய் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னை பனையூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, அவர்களை நேர்காணல் செய்து, கட்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து, நிர்வாகிகளை நியமனம் செய்தார். இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒவ்வொரு நிர்வாகிகளிடம், சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், அதை 120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவை விஜய் எடுத்துள்ளார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் மற்றும் 10 நியமன உறுப்பினர்களும் நியமிக்கப்படும் வகையிலான முடிவை எடுத்திருக்கிறார்.
அதன், முதற்கட்டமாக, 19 மாவட்டங்களுக்கான மாவட்ட பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், மதுரை, மயிலாடுதுறை, ஈரோடு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து மாவட்ட செயலாளர்களிடம் நேர்காணல் மேற்கொண்டார்.
இந்த ஆலேசானை கூட்டத்தில் பேசிய விஜய், உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. என் காதிற்கு சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இனி நீங்கள்தான் இதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக மக்கள் இயக்கமாக இருந்த போதும், எனக்காக துணை நின்று என்னுடன் உழைத்தீர்கள் என தெரிவித்தார்.
உங்களது நீண்ட கால கோரிக்கை கோரிக்கையால் தற்போது கட்சியை தொடங்கி சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வருகிறோம். அனைவரும் சேர்ந்து பயணிப்போம் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

