Vaccination | சென்னை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள கர்ப்பிணிகளிடம் தொடரும் தயக்கம்.. அச்சம் தரும் ஆய்வு
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளில், சென்னையில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையென்று தெரியவந்துள்ளது
தமிழ்நாட்டில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிலவரப்படி கர்ப்பிணிப் பெண்களில் 56% பேர் கொரோனா தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளனர். நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைகளின் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
தமிழ்நாட்டில், 2021-22 கால கட்டத்தில் 674163 கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில சுகாதாரத் துறை திட்டமிட்டிருந்தது. இதில், சுமார் 56 சதவீதத்தினருக்கு (376073) குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அறந்தாங்கி, கரூர், கன்னியாகுமரி, பழனி, பெரம்பலூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய சுகாதார மாவட்டங்களில் (health Unit Districts) 70 சதவிகிதத்திற்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சென்னையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லயென்று தெரியவந்துள்ளது. சென்னையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி வாய்ந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 58,319 ஆக உள்ள நிலையில், வெறும் 13,772 பேர் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். அதாவது, மாநிலத்தின் சராசரி விகிதத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு குறைவான (23%) எண்ணிக்கையை சென்னை கொண்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தயக்கத்தை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சமுதாய அளவில் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பொதுவாக, பொருளாதார ரீதியாகவும், சமூக அளவிலும் பின்தங்கிய மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயங்குவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசி திட்டத்தைப் பொறுத்தவரையில் பின்தங்கிய மாவட்டங்களில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
கர்ப்பிணிப் பெண்களுக்களுக்கான தடுப்பூசி பணி:
கொரோனா இரண்டாம் அலையின்போது, பல பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு கடுமையானால், இது கர்ப்பக் காலத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தன. குறிப்பாக, கடைசி மூன்று மாதங்களில் கருப்பை விரிவடைந்து உதரவிதானத்தில் அழுத்தி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு குறைத்து தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அந்த பெண்ணுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், கர்ப்பிணிப் பெண்கள் இதுபோன்ற தீவிரமான பாதிப்தை தடுக்க உதவும் என்று கூறப்பட்டது.
தாய் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அதன் மூலம் அவரது உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தி, கருவில் இருக்கும் குழந்தைக்கும் ரத்தம் மூலம் சென்று, பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தாய்ப்பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டுமே பாதுகாப்பானது. கருவுற்ற நாளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.