சென்னை ; தமிழ்நாட்டில் கஞ்சா ஜீரோ !! போதை பொருள் இல்லாத மாநிலம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
தமிழ்நாட்டில் கஞ்சா ஜீரோ என்ற நிலையில் உள்ளது. போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

நியாய விலை கடை திறப்பு
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை அடையாறு வசந்தா பிரஸ் சாலையில் 9.62 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரை அருகில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா தொகுதி மேம்பாட்டு நிதியில் 42 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி செய்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் ;
இடைநிலை செவிலியர்கள் (MLHP) மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் எடுக்கப்பட்டது. இவர்களுக்கு 11 மாதத்திற்கான பணி ஆணை தான் வழங்கப்பட்டது. இவர்களுக்கு 18,000 ரூபாய் சம்பளம் 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் கொடுக்கும்.
இடைநிலை செவிலியர்கள் சென்னைக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்து தருகிறோம் என யாரோ ஒரு இடைத்தரகர் தவறாக வழிகாட்டி அழைத்து வந்துள்ளார். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை செவிலிய சங்க நிர்வாகிகளோடு தேசிய சுகாதார திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ் பேசி ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் நெருங்குகிறது என்பதால் தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள் அதிகரித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
டெங்கு இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது
டெங்குவின் இறப்பு எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பொது சுகாதாரத் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தான் இதற்கு காரணம்.
கடந்த ஆட்சி காலத்தில் டெங்கு பாதிப்பினால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெளியே தெரியாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை எண்ணிக்கை மட்டுமே வெளியே தெரியும்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2012 ஆம் ஆண்டில் தான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகி 66 உயிரிழப்புகள் ஏற்பட்டது. 2017 - ல் 65 டெங்கு உயிரிழப்புகள். திமுக ஆட்சியில் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு தான்.
இந்த உயிரிழப்புக்கு காரணமும் மருத்துவமனைக்குச் செல்லாமல் தன்னிச்சையாக சிகிச்சை பெறுவது தான். பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைக்கும் , டெங்கு விழிப்புணர்வுக்கும் கிடைத்த வெற்றி தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு.
எடப்பாடி பழனிசாமி போதை பொருள் குறித்து பேசுவது விந்தையாக உள்ளது
கடந்த அதிமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் குறித்து கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி , இப்போது போதைப் பொருள் குறித்து பேசுவது விந்தையாக உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு போதை பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது. பான்பராக் போன்ற பொருட்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா தமிழ்நாட்டில் "0" என்ற நிலையில் உள்ளது. போதை பொருள் குறித்து குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சி தலைவர்கள் எங்கு விற்கிறது என்பதை கூறினால் கூறியவர்களின் பெயர்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை எடுப்போம்.
அரசு நடவடிக்கைகளை மறைத்து விட்டு இந்த ஆட்சியில் போதை குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பதாக கூறுவது உண்மையற்ற ஒன்று.





















