"விபத்து நடக்கலாம்.. விளம்பரப் போர்டுகளை அகற்றுங்க" ஃபெஞ்சல் புயலால் தமிழக அரசு போட்ட உத்தரவு!
கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கடக்கும்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்களையும் விளம்பர போர்டுகளையும் அகற்றுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், "தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, புதுச்சேரிக்கு தென்கிழக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை 30ஆம் தேதி காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே புயலாக கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"விளம்பரப் போர்டுகளை அகற்ற வேண்டும்"
ஃபெஞ்சல் (FENGAL) புயல் நாளை கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, "அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
உத்தரவு போட்ட தமிழக அரசு:
எனவே, இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெருமழை காரணமாக சென்னை தத்தளித்தது. சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் ஒரு வாரத்திற்கும் மேலாக தேங்கி நின்றது. இது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்த மழை, புயல் எச்சரிக்கையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
இதையும் படிக்க: Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?