Cyclone Mandous: மாண்டஸ் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்..! மக்களுக்கு நிவாரண உதவி..
சென்னையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். திருவான்மியூர் பகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மேலும், மாண்டஸ் புயல் பாதிப்புகள், மழை பாதிப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கெட்டிவாக்கம், ஈச்சம்பாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாண்டஸ் புயலின் தாக்கம் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனைhttps://t.co/wupaoCQKa2 | #CycloneMandous #ChennaiRains #TNRain #Rains #CycloneUpdates #Mandous_cyclone #MKStalinGovt #TNgovt pic.twitter.com/VZyy2ZDg5b
— ABP Nadu (@abpnadu) December 10, 2022
மாண்டஸ் புயல் பாதிப்புகள்:
முறிந்து விழுந்த 300 மரங்கள்:
சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக 300 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக மாநகராட்சி மேயர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டு மக்களை ஆட்டுவித்து வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணி அளவில் கரையைக் கடந்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
மாமல்லபுரம் அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று இரவு 9.30 மற்றும் இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் புயலாக அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி புயல் கரையைக் கடந்தது. இதன் எதிரொலியாக சூறைக்காற்றுடன் மழை விடிய விடிய கொட்டித் தீர்த்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
2 நாட்களுக்குள் நிவாரணம்:
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களுக்குள் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து துறை ரீதியாக நிவாரணப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்டஸ் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக நேற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 9 பகுதிகளில் 205 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரையை கடந்த மாண்டஸ்:
வட தமிழகக் கடலோரப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து இன்று நண்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பாக்கம் 16 செ.மீ, வில்லிவாக்கம் 6 செ.மீ, புழல் 10 செ.மீ, பூந்தமல்லி 10 செ.மீ, சத்தியபாமா பல்கலைக்கழகம் 7 செ.மீ, பள்ளிக்கரணை 7 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழைப்பொழிவு பெய்துள்ளது என்று கூறினார். புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 70 முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசி உள்ளது எனவும் வட உள்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆயுவு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.