ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் தேர்வு மாணவர்களிடம் லஞ்சம்; புகாரை தொடர்ந்து விசாரணை!
தேர்வு முறைகேடுகளில் எந்தவித சமரசமும் கிடையாது. இது ஒரு தன்னிச்சையான சம்பவமா அல்லது பொதுவான நடைமுறையா என்பது கண்டறியப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்தது தொடர்பாக முளுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கல்லூரியில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களிடம் இருந்து முறையற்ற வகையில் பணத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் செலுத்தாத மாணவர்கள் பலரும் தேர்வில் மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றனர்.
ஓவ்வொரு மாணவரும் தலா 10,000 ரூபாய் வரை தரவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான மாணவர்கள் பணத்தை செலுத்தியதாகவும், குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டுமே செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பணம் செலுத்தாத காரணத்தினால் தோல்வியடைந்த மாணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகம் தீவிர விசாரணையில் இறங்கியது. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள், உள் மற்றும் வெளி தேர்வுக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடத்திலும் விசாரணை நடத்தப்பட்டன. முதற்கட்ட விசாரணை அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கும் பல்கலைக்கழகம் சமர்பித்தது.
பல்கலைக்கழகம் சமர்பித்த விசாரணை அறிக்கையில்"சிறப்புத் தேர்வு பார்வையாளர்களின் தங்குமிடம் மற்றும் உணவு செலவுகளுக்கும், கல்லூரியின் மருத்துவத் துறைகளின் மீது நன்மதிப்பை வெளிப்படுத்தும் விதமாகவும் மாணவர்களிடத்தில் பணத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த மாணவர் பொது அறுவை சிகிச்சைபாடப்பரிவில் 300க்கு193 மதிப்பெண் பெற்றுள்ளார். மகளிர் நோய் மருத்துவவியல் (gynecology) பாடப்பிரிவில் 200க்கு 127 மதிப்பெண்ணும், குழந்தைகள் நல மருத்துவப் பிரிவில் 100க்கு 60 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். ஆனால், பணம் வசூலிக்கபட்ட பொது மருத்துவ பாடப்பிரிவில் வெறும் 43 மதிப்பெண் பெற்று தோல்வியுற்றார். தேர்வில் வெற்றிபெற குறைந்தது 50 மதிப்பெண் பெற வேண்டும். இருப்பினும், தற்போது வரையில் பணம் செலுத்தாத காரணத்தினால் தான் குறைந்த மதிப்பெண் பெற்றார் என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. மாணவர், தேர்வுக்கு சரியாக தயாராகவில்லை என்பது தெரிய வருகிறது. இருப்பினும், நாங்கள் முழுமையான விசாரணையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து தெரிவிக்கையில், " பக்க சார் பற்ற மற்றும் நடுநிலையான விசாரணையை மேற்கொள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளில் எந்தவித சமரசமும் கிடையாது. பிரச்சனையின் அடிப்படை வேர்களை பிடுங்கி எரிவது முக்கியம். இது ஒரு தன்னிச்சையான சம்பவமா? (அ) பொதுவான நடைமுறையா? என்பது கண்டறியப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் ”என்று தெரிவித்தார்.