துாத்துக்குடி , செங்கோட்டை உட்பட 65 விரைவு ரயில்கள் வேகம் அதிகரிப்பு !! எந்தெந்த ரயில்கள் ?
துாத்துக்குடி, செங்கோட்டை, நாகர்கோவில் உட்பட 65 விரைவு ரயில்களின் வேகம் வரும் ஜனவரி முதல் அதிகரிக்கப்பு. இதனால், ஐந்து முதல் 85 நிமிடம் வரை பயண நேரம் குறையும் - தெற்கு ரயில்வே

65 விரைவு ரயில்களின் வேகம் வரும் ஜனவரி முதல் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. ஜனவரி 1 முதல் இது அமலுக்கு வருகிறது. ரயில் பாதைகள் மின் மயமாக்கும் பணிகள் நிறைவு, சிக்னல் தொழில் நுட்பம் மேம்பாட்டு பணிகளால் , ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் 2026 - ம் ஆண்டு, 65 விரைவு ரயில்கள், 14 குறுகிய துாரம் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் ஐந்து நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும்.
ரயில்கள் குறித்த விபரம்
1. கேரளா மாநிலம் கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில், 85 நிமிடம்
2. கோவை - ராமேஸ்வரம், 55 நிமிடம்
3. தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் உட்பட ஐந்து விரைவு ரயில்கள் தலா 50 நிமிடம் பயண நேரம் குறையும்.
4. நாகர்கோவில் - தாம்பரம், துாத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்கள், 45 நிமிடம்
5. ராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர ரயில் 35 நிமிடம்
6. தூத்துக்குடி - சென்னை எழும்பூர் செங்கோட்டை - மயிலாடுதுறை தலா 30 நிமிடம்
7. ராமேஸ்வரம் - திருப்பதி, எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில்கள் தலா 25 நிமிடம்
8. சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர ரயில், செங்கோட்டை - எழும்பூர் பொதிகை, எழும்பூர் - குருவாயூர் உட்பட எட்டு விரைவு ரயில்களின் பயண நேரம், தலா, 20 நிமிடம் வரை குறையும்.
9. சென்னை சென்ட்ரல் - திருப்பதி உட்பட ஐந்து விரைவு ரயில்கள் தலா 15 நிமிடம்
10. எழும்பூர் - ராமேஸ்வரம் சேது, ராமேஸ்வரம் - எழும்பூர், எழும்பூர் - செங்கோட்டை, தாம்பரம் - மதுரை, திருசெந்துார் - எழும்பூர், திருச்செந்துார் - கேரளா மாநிலம் பாலக்காடு, செங்கோட்டை - ஈரோடு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு - சென்ட்ரல் உட்பட, 19 விரைவு ரயில்களின் பயண நேரம், தலா 10 நிமிடம் குறைகிறது.
11. சென்ட்ரல் - புதுடில்லி, கோவை - சென்ட்ரல், சென்ட்ரல் - போடி நாயக்கனுார், திருச்சி - ராமேஸ்வரம், சென்ட்ரல் - திருப்பதி, தாம்பரம் - நாகர்கோவில் உட்பட 17 விரைவு ரயில்களின் பயண நேரம், தலா ஐந்து நிமிடம் குறைகிறது.
இதற்கிடையே திருநெல்வேலி - செங்கோட்டை உட்பட, 14 குறுகிய துாரம் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஐந்து முதல் 35 நிமிடங்கள் பயண நேரம் குறையும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது ;
புதிய கால அட்டவணையில் புதிய அறிவிப்புகள் இடம் பெறும். ஆனால், புதிய ரயில் சேவை, கூடுதல் நிறுத்தம் போன்ற அறிவிப்புகள் இல்லை. இது பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அமல்படுத்திய பல்வேறு திட்டங்களே, புதிய அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய கால அட்டவணையில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி 'வந்தே பாரத்' ரயிலின் நேரம் மாற்றம் பற்றிய அறிவிப்பு இல்லை. அதே நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி., எனும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், நேரம் மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வகை ரயில்கள் இயக்கம் பற்றிய குழப்பம் ஏற்பட்டுள்ளது என இவ்வாறு அவர்கள் கூறினர்.





















