(Source: ECI/ABP News/ABP Majha)
பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை - சென்னை மாநகராட்சி
மெரினா கடற்கரை தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் 1.61 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மரப்பாதை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது..
சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
இதன்படி மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்ஃபி பாயின்ட் பின்புறம் மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கப்பட்டது.
இதனை போன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் மரத்தால் ஆன பாதை தற்போது அமைக்கப்படுகிறது. தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் மற்றும் காவல் நிலையம் பூத்திற்கு இடைப்பட்ட கார்ல் ஷ்மிட் (Karl Schmidt) நினைவகம் அருகில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த சிறப்பு பாதை உருவாக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பணிகள் தொடங்கியுள்ளது.
குறிப்பாக 190 மீ நீளம் 2.80 மீ அகலத்தில் சிவப்பு மராண்டி, பபூல் மற்றும் பிரேசில் நாட்டு IPE மரத்துடன் கூடிய மரங்கள் கொண்டு இந்த சிறப்பு பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை 4 மாதத்தில் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில்..
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு நடைபாதை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகையும், அலை ஓசையும் ரசிக்கும்படியாக இந்த திட்டம் அமைந்திருந்தது.
குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் கடலின் அழகை ரசித்து மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இதேபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சிறப்பு நடைபாதை மிகவும் தரம் ஆகவும் , குறிப்பாக மழைக்காலங்களில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.