கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயரில் மரக்கன்று- கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி...!
மரமானது வளர்ந்த பின் யாருடைய நினைவாக வைக்கப்பட்டதோ அவர்களின் பெயர்கள் அந்த மரத்தில் பொரிக்கப்படும் அல்லது அவர்களின் பெயர்ப்பலகைகள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பமான கொரோனா பேரிடரானது முதல் அலை , இரண்டாம் அலை என பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாவது அலைக்கான எச்சரிக்கையையும் மத்திய மாநில அரசுகள் விடுத்துள்ளன.
இதேபோல் உலக சுகாதார மையம் இந்த கொரோனா மூன்றாம் அலையினை சாதரணமாக எண்ணாமல் அனைவரும் விழிப்போடு செய்யலபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மூன்றாம் அலையானது குழந்தைகளை மிகவும் பாதிக்கும் எனவும் எச்சரித்துள்ளது மட்டுன்றி மூன்றாம் அலையில் கொரோனாவிற்கான அறிகுறிகள் இல்லாமல் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
கடலூரிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்குநாள் வரும் நிலையில் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் நினைவாக மரம் நடுவதற்கான முன்னெடுப்பை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
கடலூரில் இதுவரை 61,220 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் சுமார் 59622 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் 533 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது சுமார் 777 பேர் சிகிச்சையில் உள்ளனர் இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும் சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது.
முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியமானது தடுப்பூசி செலுத்தி கொள்வது என்பதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடலூரில் இறந்தவர்களின் நினைவாக மரக்கன்று நடும் விழாவினை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன் ஆகியோர் முதற்கட்டமாக தொடங்கிவைத்தனர். வில்வநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் கைகளால் மரக்கன்று நடப்பட்டது.
அந்த மரமானது வளர்ந்த பின் யாருடைய நினைவாக வைக்கப்பட்டதோ அவர்களின் பெயர்கள் அந்த மரத்தில் பொரிக்கப்படும் அல்லது அவர்களின் பெயர்ப்பலகைகள் வைக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் அவர்கள் தெரிவித்தார். இவ்வாறு கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடுவது சுற்றுச்சூழலுக்கும் நல்லது, இறந்தவர்களையும் ஞாபகபடுத்திக்கொண்டே இருக்கும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் நினைவாக மரம் நடும் நிகழ்வை முன்னெடுக்கும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சி பொதுமக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த முயற்சியை மாவட்டம் தோறும் விரிவு படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.