Property Tax: சொத்து வரி செலுத்த கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு... சென்னை மாநகராட்சி அறிவிப்பு
முன்னதாக நவம்பர் 15ஆம் தேதி வரை சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை சென்னை மாநகராட்சி நீட்டித்திருந்தது.
சென்னை மாநகராட்சியில் நடப்பு ஆண்டான 2022 - 2023க்கான சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் நடப்பு நிதியாண்டுக்கான 2ஆம் அரையாண்டு சொத்து வரியை நவம்பர் 15ம் தேதிக்குள் செலுத்துமாறு கால நீட்டிப்பு செய்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதிவரை தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.
முன்னதாக சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரி மற்றும் கட்டண விவரங்களை அறிய புதிய அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டிருந்தது. சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு, சொத்து வரி அடையாள அட்டை வழங்க உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்தது.
சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் கட்டக்கூடிய சொத்து விவரங்கள் இருக்கும். அடையாள அட்டைகளில் உரிமையாளர்களின் பெயர்கள், சொத்து வரி ஐடி மற்றும் QR குறியீடு ஆகியவை ஸ்கேன் செய்யும்போது சொத்து, அதன் அளவு, வரி நிலுவைத் தொகை மற்றும் இதற்கு முன்பு செலுத்திய தொகை போன்ற அனைத்து விவரங்களும் அடையாள அட்டைகளில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
”பலருக்கு சொத்து அடையாள அட்டைகள் குறித்த விவரங்கள் சரிவர இல்லாததால் உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் சொத்து உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை அவர்களது வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும் புவியியல் தகவல் அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், சுமார் 3 லட்சம் சொத்துகள் குறை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இந்தச் சொத்துக்களை மறுமதிப்பீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படும். சொத்து வரி வசூலை மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியை விட, 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சென்னையில் சொத்து வரி வசூல் ரூபாய் 293 கோடி அதிகரித்துள்ளது” என இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக முதல் அரையாண்டுக்கான உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்தாத சொத்து உரிமையாளர்களுக்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து முன்னதாகப் பேசிய சென்னை மேயர் பிரியா, “சொத்து வரி செலுத்த போதிய கால அவகாசம் வழங்கியபோதிலும், முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்களுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 2 சதவீத தனி வட்டி விதிப்பதில் இருந்து தளர்வு செய்து அனுமதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.