பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு பாஜகவில் மாவட்ட அளவில் பதவி - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு பாஜகவில் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரபல ரவுடி படப்பை குணா
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என். குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும்.

நீதிமன்றத்தில் சரண் அடைந்த படப்பை குணா
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இவர் மீதான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளைத்துரை தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் எப்படியும் கைது செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்டு, படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சிறையில் இருந்த படப்பை குணா ஜாமினில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியே வந்தார் . படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு வகையில் கட்சிப் பணியிலும் எல்லம்மாள் ஈடுபட்டு வந்தார். மறைமுகமாக கட்சிக்கு தேவையான நிதி உதவிகள் உள்ளிட்டவற்றை படப்பை குணா செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் கூட படப்பை குணா ஸ்ரீபெரும்புதூர் நடைபெற்ற, பாஜக கூட்டம் ஒன்றில் பாஜகவில் இணைத்துக்கொள்ள வந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
கட்சிப் பணியில் தீவிரம் காட்டிய படப்பை குணாவின் மனைவி
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே கட்சிப் பணியில் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மாவட்ட அளவில் நடைபெறும் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது, கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார். விரைவில் படைப்பை குணா பாஜகவில் இணைவார் என காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காணப்பட்டு வந்தது.
அடிதடி to அரசியல்
இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாநில தலைவர் கே அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோத் பி செல்வம் ஒப்புதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனை படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனை படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக குணசேகரன் நியமிக்கப்படுவதாக " அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக, படப்பை குணா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக மாநில பட்டியலின அணி மாநில செயலாளராக, நியமிக்கப்பட்ட நிலையில் படப்பை குணாவிற்கும் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





















