Perur Seawater Desalination: சென்னை வாசிகளுக்கு குடிநீருக்கு பஞ்சம் இல்லை.. தெற்காசியாவை திரும்பி பார்க்க வைக்கும் திட்டம்
Perur Seawater Desalination: பேரூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் கட்டுமான பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வேகமாக வளர்ந்து வரும் சென்னை மாநகர் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மீஞ்சூர் கடல் நீர் குடிநீராக நிலையத்திலிருந்து, நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையத்திலிருந்து கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றார்கள்.
மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம்
இதேபோல சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் இயங்கிவருகிறது. இதன்மூலம் சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், இராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
பேரூர் கடல் நீரை குடிநீரை குடிநீராக்கும் திட்டம்
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினைத் தொடர்ந்து சென்னைக்கு அருகாமையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பெருகிவரும் வளர்ச்சிக்கேற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில், ரூ.4,276 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தற்போதைய நிலவரம் என்ன ?
இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையவுள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. சுமார் 35 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த பணிகள் வேகமாக நடைபெற உள்ளது.
கடல்நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு, செதிலடுக்கு தொட்டி, சவ்வூடு வெளியேற்றும் தெளிந்த நீர் தொட்டி, நடுநிலைப்படுத்தும் தொட்டி, நீர் சேகரிப்பு தொட்டி, சுத்திகரிக்கப் பட்ட நீர் சேகரிப்பு தொட்டி, கசடுகளை கெட்டிப் படுத்தும் தொட்டி, நிர்வாக கட்டடம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 இலட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.