Sexual Harassment | பதிலே சொல்லாத தனியார் பள்ளி முதல்வர் : கடுப்பான போலீஸ்
ராஜகோபால் மீது பல மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தகவல் வெளியானது.
சென்னை தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துவந்த ராஜகோபாலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் கைது செய்யப்பட்ட ராஜகோபால் மீது பல மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ராஜகோபால் மீது பலமுறை புகார் அளித்தது தெரியவந்துள்ளது. மேலும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் புகார்களை கண்டுகொள்ளாமல், தனியார் பள்ளி அலட்சியமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் கைது செய்யப்பட்ட ராஜகோபாலனால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்தத் தனியார் பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் இயக்குனர் ஷீலா ராஜேந்திரன் ஆகிய இருவரிடமும் அசோக் நகர் போலீசார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நேற்று விசாரணை நடத்தினர். இதில் மாணவி சார்பில் பலமுறை புகார் அளித்தும், ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு என்ன காரணம் உள்ளிட்ட பல கேள்விகள் இருவரிடமும் கேட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் அசோக் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். அவரிடம் தியாகராயநகர் துணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் அசோக்நகர் போலீசார் ஆகிய இருவரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதற்கான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை என போலீசார் தரப்பு தெரிவித்துள்ளனர்.