MK Stalin: அமலாக்கத்துறை சோதனை எதிர்பார்த்ததுதான்... பாஜக கூட்டணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 2024ஆம் ஆண்டு புதிய இந்தியா அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு புதிய இந்தியா அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வை வீழ்த்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 2024இல் புதிய இந்தியா அமையும்” என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பின் விவரம்:
” இந்தியாவில் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், மாநில சுயாட்சி, மதசார்பின்மை,. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கக் கூடிய நலன் - இதெல்லாம் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், ஒற்றைத்தன்மை ஏதேசதிகாரம், அதிகார குவியல் சிக்கி நாடு சிதைக்கொண்டுள்ளது. அதனால, பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கவும்,பாரளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. பாட்னாவில் நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்றன. பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் 26- பேர் பங்கேற்றுள்ளன. பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் இணைந்து வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். அகில இந்திய அளவிலே கொள்கை கூட்டணியாக அமைய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இது மகிழ்ச்சியாக இருக்கும் என்று நாடே எதிர்ப்பார்த்துள்ளது.
2024-நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாட்னா, பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நம்பிக்கை, மகிழ்ச்சியை தருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் அடுத்த கூட்டத்தில் அலோசனை மேற்கொள்வோம். மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம். அமலாக்கத்துறை சோதனை என்பது எதிர்பார்த்ததுதான்; அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள நாங்கள் தாயராக உள்ளோம்.”என்றும் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ”இது எதிர்பார்த்ததுதான். இதை போலவே இன்னும் நிறைய நடைபெறும். அதிலும் வெற்றி காண்போம். எதையும் சட்ட ரீதியிலாக எதிர்கொள்வோம். ” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மற்றும், ஊழல் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,” அமலாக்கத்துறை ஆளும் ஆட்சியுடன் கூட்டணியில் உள்ள வழக்குகளை கண்டும் காணாமல் இருப்பதே அவர்களுக்கு நியாகமாக இருக்கும். இன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் யாரை (ஊழல் வழக்கு உள்ளவர்கள்) பக்கத்தில் இருந்தார் என்பது வேடிக்கையாக உள்ளது.” என்று புன்னகையுடன் கூறினார்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்- பெங்களூரு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவுகளை எடுக்க குழுக்கள் அமைக்கப்படும் என்றும் பிரச்சாரத்தை நிர்வகிக்க டெல்லியில் செயலகம் ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இந்திய கருத்தாக்கம்"
கூட்டம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, பல்வேறு தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. இந்தியா என்ற கருத்தாக்கம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல் பறிக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பையும், நமது மக்களின் குரலையும், இந்த மகத்தான நாட்டின் கருத்தாக்கத்தையும், இந்தியா என்ற எண்ணத்தையும் பாதுகாக்கிறோம். இந்தியா என்ற கருத்தாக்கத்தை எதிர்த்து போரிட்டால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்.