காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் உதயநிதி ‘ அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள திமுக நிர்வாகியின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டது மட்டும் இல்லாமல் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கழகத்தின் மூன்றாவது தலைமுறையினரின் திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாஜக அதிமுக அடிமை படுத்துவது போல் ஒருவர் ஒருவரை அடிமைப்படுத்தாமல், சுயமரியாதை சிந்தனையும் பெரியாரும் பகுத்தறிவும் போல,பேரறிஞர் அண்ணாவும் மாநில சுயாட்சிம் போல,முத்தமிழ் அறிஞர் கலைஞரும் தமிழும் போல, கழக தலைவரும் திராவிட மாடல் ஆட்சியைப் போல, சிறப்பாக இணைந்திருக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் பேசினார்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்
அதன் பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா இல்லத்திற்கும் சென்றார். அதன் பின்னர் அங்கு இருந்த பதிவேட்டில், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என எழுதி கையெழுத்திட்டார். மேலும் அந்த பதிவேட்டில், கலைஞர் புகழ் ஓங்குக, தலைவர் வாழ்க என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னதாக நேற்று (பிப்ரவரி, 7)
மதுரை மாவட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை பாண்டிக்கோயில் ரிங் ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் மாவட்டம் முழுவதுமுள்ள 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்கள் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,.." இவ்வளவு பெரிய தாய்மார்கள் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியுடன் எங்குமே பார்த்தது இல்லை. கண்ணகி ஒற்றை சிலம்பை வைத்து நீதி கேட்டது மாதிரி, ஒற்றை செங்கல்லை வைத்து நான் நீதி கேட்க காரணமாக இருந்தது இந்த மண்தான். தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்ற அந்த ஒற்றை செங்கல் மதுரையில் எடுத்ததுதான்.
கழக ஆட்சி அமையும் போதெல்லாம் மதுரையின் வாழ்வாதாரம் உயர்ந்து கொண்டே போகிறது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 75% வாக்குறுதிகள் நிறைவு பெற்றுள்ளன. செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்காதது தான் எங்கள் பிரச்னை. அதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் அதைப்பற்றிய தவறான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறார்கள். ஆனால், கடந்த அதிமுக ஆட்சி பல லட்சம் கோடி கடனையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் தான் விட்டுச்சென்றது. தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் செயல்படுத்திய பல திட்டங்கள் பெரும் பயன் அளித்துள்ளன. தமிழகம் முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து சேவை மூலம் 220 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பெண் திட்டம் மூலம் 1.16 லட்சம் மாணவிகளும், மக்களை தேடி மருத்துவம் மூலம் 1 கோடி மக்களும், காலை உணவு திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் குழந்தைகளும் பயனடைந்து உள்ளனர் என குறிப்பிட்டு பேசினார்.