கையில் கயிறு, பொட்டு வைக்காதீங்க சொன்ன ராசா; எங்க தலைவர் அப்படி சொல்லவில்லை என சொல்லும் அமைச்சர் சேகர்பாபு
ஆ.ராசா சொன்னது அவருடைய கருத்தாக இருக்கலாம் , எங்கள் தலைவர் அப்படி எதுவும் சொல்லவில்லை - அமைச்சர் சேகர்பாபு பதில்

அன்னம் தரும் அமுத கரங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு 47ஆவது நாளாக ஏழுகிணறு பகுதியில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது ,
இரண்டு திமுக கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது திமுகவிற்கு பின்னடைவா என்ற கேள்விக்கு ,
இது நியாயமான ஆட்சி, நீதிதேவன் ஆட்சி. ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்ற எம்ஜிஆரின் பாடலைப் போல தன் இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் , தவறு என்று தெரிகிற போது அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கின்ற சட்டத்தின் ஆட்சியை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் தமிழக முதல்வர் என்ற நன்மதிப்பைத் தான் பெறுகிறார். இதனால் இயக்கத்திற்கோ தலைமைக்கோ எந்த விதமான அவப்பெயரும் கிடையாது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆ.ராசா பேசிய விவகாரம் ,
கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்களும் பொட்டு வைத்து , சங்கியும் பொட்டு வைக்கும் போது, நீங்களும் கையில் கயிறு கட்டி, சங்கியும் கையில் கயிறு கட்டும் போது எவன் சங்கி , எவன் திமுககாரன் என்ற வித்தியாசம் தெரியாது. இதனால் தான் சொல்கிறேன் திமுக கரை வேட்டி கட்டும் போது பொட்டு வைக்காதீங்க என்று கூறியுள்ளார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் எழுப்பிய கேள்விக்கு ,
ஆ.ராசா சொன்னது அவருடைய கருத்தாக இருக்கலாம், எங்கள் தலைவர் அப்படி எதுவும் சொல்லவில்லை என பதில் அளித்தார்.
பாஜக - வில் அண்ணாமலை நீக்கம் ?
அண்ணாமலை நீக்குவது அந்த கட்சியின் உள்துறை அமைச்சரும் , பிரதமரும் முடிவெடுக்க வேண்டியது. எங்களைக் கேட்டால் நாங்கள் என்ன செய்வோம். களத்தில் களமாடுவதற்கு ஒரு அண்ணாமலை அல்ல, ஒரு நூறு அண்ணாமலை வந்தாலும் சமாளிக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் தயார். அது அவர்கள் கட்சி சார்ந்த பிரச்சனை, பக்கத்து வீட்டில் எட்டிப் பார்க்கும் பழக்கம் திமுக - விற்கு கிடையாது.
தேர்தல் களத்தில் நின்று முதல்வர் ஆனவர் எங்களது தலைவர். குறுக்கு வலியை எப்போதும் நாங்கள் விரும்பாதவர்கள். மற்ற இயக்கத்தில் நடக்கும் குளறுபடிகளை வைத்து ஆதாயம் தேட நினைப்பவர் இல்லை. எங்கள் கொள்கைகள் கோட்பாடுகள் லட்சியங்களை மையப்படுத்தி வளர்ந்து கொண்டிருக்கிற இயக்கம் திமுக.
கோயில்களில் கயர் மேட் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, நீர்மோர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதவி மையங்களில் எப்போதும் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில கோயில்களில் தற்காலிகமாக பச்சை வலை பந்தல் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தை பொறுத்து கோயில்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு கோயில்களில் 40 ஆண்டு காலமாக இருந்த பிரச்சனைகளைக் கூடத் தீர்த்து அனைவரும் செல்லும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறோம். சுமூகமான சூழல் ஏற்படுத்தி எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்க அதற்கான நடவடிக்கையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். தொடர்ந்து அது தொடர்பான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.





















