செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி : ஹெச்.ஐ.வி பரிசோதனையில் முறைகேடு : லஞ்ச ஒழிப்புத்துறையிடம் குற்றச்சாட்டு..!
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நுண்ணுயிரி ஆய்வகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நுண்ணுயிர் பிரிவின் கீழ் எச்ஐவி பரிசோதனை மையத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய பயணப்படி , பணிப்படி ,உணவு உள்ளிட்டவற்றை வழங்காமல் ஏமாற்றி வருவதாக ஆய்வகப் பணியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகம் அமைந்துள்ளது. இந்த ஆய்வகம் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை சேர்ந்த ஒருங்கிணைந்த கலந்தாய்வு மற்றும் பரிசோதனை ஆய்வகங்களில், எடுக்கப்படும் எச்ஐவி பரிசோதனை மாதிரிகள் அனைத்தும் செங்கல்பட்டு மருத்துவமனை கல்லூரியில் அமைந்துள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஆய்வகத்தை சேர்ந்த பணியாளர்கள், ரத்த மாதிரிகளை கொண்டு வந்து செங்கல்பட்டு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொள்வார்கள். அவ்வாறு பிற மாவட்டங்களில் இருந்து ரத்தம் மாதிரிகளை கொண்டுவரும், ஊழியர்களுக்கு பயணப்படி ,பணிப்படி உள்ளிட்டவை வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சார்பில் வருடம் தோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. இருந்தும் ஆய்வகத்திற்கு வரும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்காமல், போலியாக ரசீது காண்பித்து அந்த பணத்தை துறை அதிகாரிகள் பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
அதேபோல வருடத்திற்கு இரண்டு முறை பிற மாவட்டங்களில் பணிபுரியும் ஆய்வகத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு EQAS பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும். அவ்வாறு பயிற்சி வகுப்புகள் எடுக்கும் பொழுது கலந்துகொள்ள வரும், ஊழியர்களுக்கு பயணப்படி ,பணிப்படி உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். அவையும் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதற்காக 2018 19 நிதியாண்டில் 75 ஆயிரம் ரூபாயும், 2019-20 நிதி ஆண்டில் 1.17 லட்சம் ரூபாயும்,20-2021 நிதி ஆண்டில் 1.25 லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் NABL சார்பாக ஆய்வகத்தை மேம்படுத்துவதற்காக வருடம் தோறும் அளிக்கப்படும் நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் துறை அதிகாரி போலி கணக்குகள் மூலம் அவை ஏமாற்றியதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதற்காக 2018
-2019 நிதியான ஆண்டில் 1.3 லட்சம், 2019- 20 நிதி ஆண்டில் 1.7 லட்ச ரூபாய், 2020 -2021 இல் 1.25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.- தங்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கவில்லை என லஞ்ச ஒழிப்பு துறைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை கருவிகளை வீணாக்கியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X