Mathi Express : மதி எக்ஸ்பிரஸ் வாகனத்திற்கான விண்ணப்பங்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன அங்காடி .. விவரம்..
100 முக்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய “ மதி எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதி எக்ஸபிரஸ் (Mathi Express)
மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், உள்ள 2,06,745 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டு 41,349 சிறப்பு சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
சந்தை வாய்ப்பு
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய “மதி எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படுகிறது.
விதிமுறைகள் சொல்வது என்ன ?
எனவே, கீழ்க்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விதிமுறைகள் பின்வருமாறு,
- மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்பட வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் உறுப்பினர் உள்ள சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் (NRLM PORTAL) பதிவு பெற்றிருத்தல் அவசியம்.
- பொருட்கள் உற்பத்தி / விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும்.
- சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டிற்கு மேல் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் உறுப்பினர்மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதையும் வங்கி மற்றம் சமுதாய அமைப்புகளில் வராக்கடன் ஏதுமில்லை எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
- வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் பயனாளிக்கு வழங்கப்படும்.
- வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கே ஒப்படைத்திட வேண்டும்.
- விதிமுறைகள் மீறி செயல்படும் உறுப்பினரிடமிருந்து வாகன அங்காடியினை திரும்ப பெற்றுக்கொள்ள மாவட்ட திட்ட இயக்குநர் மூலம் உரிய அறிவிப்பு ஆணைகள் வழங்கி பறிமுதல் செய்ய மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
- தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும். அங்காடிக்கு என வாடகை ஏதும் கிடையாது.
- பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் மாவட்ட அளவிலான குழு இறுதி செய்யும் உறுப்பினருக்கு வழங்க வேண்டும்.
மேற்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 20.05.2023 ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), பணிபுரியும் ஆடவர் / பெண்கள் தங்கும் விடுதி, சத்யா நகர், ( HP பெட்ரோல் பங்க் அருகில்), சிங்கபெருமாள் கோயில், செங்கல்பட்டு – 603 204 என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்