(Source: ECI/ABP News/ABP Majha)
Sundhareswarar Temple Chariot : பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தயாராகும் புதிய தேர்..!
Sundhareswarar Temple : ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் கோவூர், அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் அமைக்கும் பணிகள் தொடங்கியிருப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர், அருள்மிகு சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், ( Sundhareswarar Temple, Chennai Navagraha Sthalam for Budhan ) ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள திருத்தேர் திருப்பணியை, அமைச்சர் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதிய திருத்தேர்:
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பேசுகையில், 1008 சிவாலயங்களில் தொன்மை வாய்ந்ததும், தெய்வச் சேக்கிழார் பெருமான் மற்றும் தெய்வ தியாகராசரால் பாடல் பெற்றதுமான சிறப்பினை உடையது அருள்மிகு சுந்தரேசுவர் திருக்கோயிலாகும். இது சென்னையைச் சுற்றி அமைந்துள்ள நவகிரக தலங்களில் புதன் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாக திகழ்கிறது.‘ இத்திருக்கோயின் திருத்தேர் சிதலமடைந்த நிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 99 லட்சத்தில் புதிய திருத்தேர் அமைக்க இன்று பணி தொடங்கப்பட்டுள்ளது.
நவக்கிரக தலங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரை சுற்றி நவக்கிரங்களுக்கும் தலங்கள் அமைந்துள்ளன. நவக்கிரகங்களை தரிசிக்க தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளுக்கு செல்ல இயலாதவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பகுதியை சுற்றி அமைந்துள்ள கொளப்பாக்கம், சோமங்கலம், மாங்காடு, போரூர், குன்றத்தூர் திருநாகேஸ்வரம், கிருகம்பாக்கம் மற்றும் பூவிருந்தவல்லி பகுதிகளில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களை விளம்பரப்படுத்தி நவக்கிர சுற்றுலா ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறை செய்து தந்திட வேண்டும். இக்கோயிலுக்கு விரைவில் அமைக்கப்பட உள்ள அறங்காவலர் , குழுவினரோடு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த திருக்கோயிலை மேம்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் உதவியுடன் உபயதாரர்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி சுமார் ரூ.49 லட்சம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிதி ரூ.50 லட்சத்தையும் சேர்த்து 99 லட்சம் ரூபாய் செலவில் திருத்தேர் செய்கின்ற பணியை தொடங்கி வைத்துள்ளோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், அருள்மிகு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயில், புரசைவாக்கம் அருள்மிகு கங்காதேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களில் புதிய தங்கத் தேர்களும், சென்னை, அருள்மிகு காளிகாம்பாள், இருக்கன்குடி, திருத்தணி, திருக்கருக்காவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய திருக்கோயில்களுக்கு 5 புதிய வெள்ளித்தேர்களும் செய்யும் பணிகளும், சுமார் ரூ.31 கோடி செலவில் 51 புதிய மரத்தேர்களும் செய்யும் பணிகளும், ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் மரத்தேர் மராமத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இறைச்சொத்து இறைவனுக்கே
அதேபோல குடமுழுக்குகள் அதிகமாக நடைபெற்ற ஆட்சியாக இந்த ஆட்சிதான் திகழ்கிறது. திருவட்டாறு திருக்கோயிலில் 390 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டும், சுமார் 123 ஆண்டுகளுக்குப் பிறகு திருநெல்வேலி அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி திருக்கோயிலில் கடந்த வாரமும் குடமுழுக்கு நடைபெற்றது. இன்றைய தினம் வரை 862 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன.
கோவூர் சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு 2008 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும் என்பதால் சுமார் ரூ. 70 லட்ச ரூபாய் செலவில் 12 திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் ஆவணி மாதம் பாலாலயம் செய்ய உள்ளோம். நில மீட்பை பொறுத்தவரையில் ரூ. 4795 கோடி மதிப்பீட்டிலான 5060 ஏக்கர் பரப்பளவு நிலங்களை இறைச்சொத்து இறைவனுக்கே என்ற வாக்கிற்கிணங்க ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கைப்பற்றிய ஆட்சி தமிழக முதல்வரின் ஆட்சியாகும். இறையன்பர்களுடைய அடிப்படை தேவைகளை மகிழ்ச்சியோடு நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு துறையாக இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறை திகழ்கிறது, என்று தெரிவித்தார்.