இன்று வாகனமில்லா ஞாயிறு… குழந்தைகள் ஓடி விளையாடலாம்! சென்னையில் இங்கெல்லாம் வாகனங்கள் ஓடாது..
வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், குழந்தைகளுடன், பெற்றோர் வெளியே விளையாடி மகிழவும், மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில், இரண்டு மாதங்கள் வாகனமில்லா ஞாயிற்றுகிழமைகள் நடத்தப்படுகிறது.
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இன்று வாகனமில்லா ஞாயிற்றுகிழமை கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
வாகனமில்லா ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியில் சென்று விளையாடும் இடா வசதிகள் ஒரு சில அபார்ட்மெண்ட்களில் மட்டுமே உள்ளன, அதுமட்டுமின்றி சென்னையில் கடற்கரைகளை விட்டால் வேறு உகந்த இடங்களும் கிடையாது. அந்த இடங்களும் வாகனங்களால் சூழப்படுவதால் சென்னையில் வளரும் குழந்தைகள் வீதிகளில் விளையாடுவது என்பதையே மறக்கும் சூழல் உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்கவே இந்த நாள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில், வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், குழந்தைகளுடன், பெற்றோர் வெளியே விளையாடி மகிழவும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை சார்பில், இந்த இரண்டு மாதங்கள் வாகனமில்லா ஞாயிற்றுகிழமைகள் நடத்தப்படுகிறது.
இரு மாதங்களுக்கு…
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த முறை அனுசரிக்கப்படும். அது இன்று முதல் தொடங்குகிறது. இன்றைய தினம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து அந்த சாலைகளில் தடை செய்யப்படும். சாலைகளில் பொதுமக்கள், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடலாம்.
போக்குவரத்து காவல்துறை அறிக்கை
"சென்னை பெசன்ட் நகர், 6-வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவில் இருந்து 3-வது பிரதானசாலை சந்திப்பு வரை 'கார் இல்லாத ஞாயிறு' நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 8 வாரங்கள் அதாவது செப்டம்பர் 4, 11, 18, 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மேற்கண்ட பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்", என்று போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
மேலும் போக்குவரத்து மாற்றம் குறித்து, "இந்நிகழ்ச்சிக்காக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. 7 வது நிழற்சாலையில் இருந்து 6 வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல உத்தேசித்துள்ள வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இலக்கை அடைய 16 வது குறுக்குத் தெரு வழியாக 2 வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.16 வது குறுக்குத் தெருவில் இருந்து 6 வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை 2 வது நிழற்சாலை மற்றும் 16 வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். 3 வது மெயின் ரோட்டில் இருந்து 6-வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3 வது மெயின் ரோடு மற்றும் 2 வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும் 4 வது மெயின் ரோடு மற்றும் 5-வது நிழற்சாலை யில் இருந்து 6 வது நிழற் சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவை மேலும் 4 வது மெயின் ரோடு மற்றும் 5 வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த மக்கள் பயனுற வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்", என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்