Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Urapakkam-Vandalur: வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே 400 மீட்டர் நீளத்திற்கான ரயில்வே பாதை அமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.

Urapakkam-Vandalur: புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டவுடன், தாம்பரம் நோக்கிய பயணத்திற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய மூன்றாவது ரயில் பாதை அகற்றப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்:
கிளாம்பாக்கம் ரயில் நிலைய திட்ட பணிகளின் அங்கமாக, ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் இடையே நடைமேடை அமைப்பதற்கான 400 மீட்டர் தூரத்திற்கான இருப்புப் பாதையை அமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. இரண்டு ரயில் இருப்பு பாதைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நடைமேடையானது இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒற்றை நடைமேடையாகும். இது பயணிகள் இருபுறமும் ரயில்களில் ஏறவும் இறங்கவும் அனுமதிக்கிறது.
புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டவுடன், தாம்பரம் நோக்கிய பயணத்திற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய மூன்றாவது ரயில் பாதை அகற்றப்பட உள்ளது. இதன் மூலம் ஏற்படும் காலி இடத்தில் இரண்டாவது தண்டவாளம் மற்றும் புதிய தண்டவாளம் இடையே, புதிய நடைமேடை அமைக்கப்படும். இந்த நடைமேடையானது செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையேயான ரயில்களை இயக்க உதவும். இரு பாதைகளிலும் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக இருக்கும். அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய பாதை மூன்றாவது பாதையின் மறுசீரமைப்பு மட்டுமே ஆகும்.
கட்டுமான பணிகள்:
புதிய பாதைக்கான மண் அணை ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது. மின் கம்பங்களை நிறுவி கான்கிரீட் ஸ்லீப்பர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதை விரைவில் அமைக்கப்படும். பாதைகளை இணைத்த பிறகு, தற்போதுள்ள மூன்றாவது பாதை அகற்றப்பட்டு மேடை அமைக்கப்படும். புதிய பாதை அமைக்கப்பட்டவுடன், அதன் ஒரு முனை வண்டலூர் நோக்கி ஓட்டேரி நீட்டிப்பில் சாலை மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையுடனும், மற்றொரு முனை ஊரப்பாக்கம் நோக்கி கிளாம்பாக்கத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகிலும் இணைக்கப்படும்.
3 நடைமேடைகள்:
தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும் ரயில்களுக்கான பக்கவாட்டு நடைமேடையானது, முதல் இருப்பு பாதைக்கு அருகே ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. அதுதொடர்பான 60 சதவிகித பணிகள் முடிந்துள்ளன. அது முற்றிலும் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் இருக்கும். ஒவ்வொன்றும் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களை கையாளும் திறனை கொண்டிருக்கும். இதனால், பொதுமக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து நகருக்குள் பயணிப்பதற்கும், நகரில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கும் செல்வதற்கான இணைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அதன் மூலம் எம்டிசி பேருந்துகளுக்காக காத்திருப்பது, கடும் கூட்ட நெரிசலில் பயணிப்பது, கூடுதல் கட்டணம் செலுத்தி கார் மற்றும் ஆட்டோக்களில் பயணிப்பது போன்ற பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது.
450 மீ நடை மேம்பாலம்:
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ரயில் நிலையத்துடன் இணைக்கும் 450 மீட்டர் நீளத்திற்கான உயர் நடைமேம்பாலம் அமைப்பதற்கான பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரயில் நிலையத்திற்கு அருகில் 1.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் சிஎம்டிஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அது விரைவில் நிறைவடையும் என கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் பிரச்னையின்றி பொதுமக்கள் எளிதில் சாலையை கடந்து ரயில் நிலையம் மற்றும் பேருந்து முனையம் இடையே பயணிக்க முடியும். தற்போது, தற்காலிகமாக ஜிஎஸ்டி சாலையில் பேருந்து முனையம் அருகே காவலட் அவுட்-போஸ்ட் அமைத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல உதவி வருகின்றனர். இதற்காக 24 மணி நேரமும் காவலர்கள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு கிடைத்த தீர்வு:
கோயம்பேட்டிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அனைத்து பேருந்துகளும் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. அந்த முனையம் சுமார் ஒரு லட்சம் பயணிகளை கையாள்கிறது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வார இறுதி மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமானோர் அந்த பகுதிகளில் குவிகின்றனர். தற்போதைய சூழலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, பொதுமக்கள் சென்னை நகருக்குள் வர எம்டிசி பேருந்துகள் மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நகர்ப்புறத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கூடுதல் இணைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
அதனடிப்படையில் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ சேவை நீட்டிப்பும் ஏற்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன் முதற்கட்டமாக பேருந்து முனையத்தை ரயில் நிலையத்துடன் இணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதன் மூலம், புறநகர் பகுதியில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கான பயணம் இனி எளிதாகும் என நம்பப்படுகிறது.





















