kilambakkam to Tiruvallur : கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை.. பஸ் டைமிங் தெரிந்துகொள்ளுங்கள் ..!
kilambakkam - Tiruvallur Bus: திருமுடிவாக்கம் சிட்கோ, பூந்தமல்லி பேருந்து நிலையம், திருமழிசை, மணவாளன் நகர் ஆகிய பகுதிகள் வழியாக பேருந்து இயக்கப்பட உள்ளது.
திருமுடிவாக்கம் சிட்கோ, பூந்தமல்லி பேருந்து நிலையம், திருமழிசை, மணவாளன் நகர் ஆகிய பகுதிகள் வழியாக பேருந்து இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam bus terminus
தென் மாவட்டம் செல்லும் பயணிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, மாற்றாக கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பொழுது, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன. தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஆகாயம் மேம்பாலம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பும் பெற்று வருகிறது.
பொதுமக்களின் கோரிக்கை
பல்வேறு புதிய வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது திருவள்ளூர் செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டில் இருந்து அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாததால் பயணிகள் அவதி அடைந்து வந்தனர். இதனால் முக்கிய நகராக இருக்கக்கூடிய திருவள்ளூர் பகுதிக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை போக்குவரத்து துறை பரிசீலனை செய்தது இதனை அடுத்து கிளாம்பாக்கத்தில் இருந்து திருவள்ளூருக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை - kilambakkam to Tiruvallur
கிளாம்பாக்கத்தில் இருந்து திருமுடிவாக்கம் சிட்கோ, பூந்தமல்லி பேருந்து நிலையம், திருமழிசை, மணவாளன் நகர் ஆகிய பகுதிகள் வழியாக பேருந்து இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் புறப்படும் நேரம் என்ன ?
கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்து புறப்படும் நேரம் : காலை 5 மணி, காலை 7 மணி, காலை 9 மணி, காலை 11 மணி, மதியம் 1 மணி, மதியம் 3 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் இருந்து பேருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து : காலை 6 :45 மணி, காலை 9 மணி, காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 4: 55 மணி, இரவு 7:05 மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் இருந்து பேருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் பேருந்து சேவைகள் பயன்பாட்டிற்கு வந்தால், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.பேருந்து சேவை பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பு பெரும் பட்சத்தில் கூடுதலான பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.