தவித்த பயணிகள்.. மீண்டும் பிரச்சினை கொடுக்கும் கிளாம்பாக்கம் - நள்ளிரவில் நடந்தது என்ன ?
Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என குற்றச்சாட்டை முன்வைத்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - kilambakkam new bus stand
தென்மாவட்ட மக்களுக்கு செல்பவர்களுக்கு என பிரத்தேக பேருந்து நிலையமாக, சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தபோது, பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்து வந்தனர்.
தொடர்ந்து படிப்படியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிளாம்பாக்கத்திற்கு ரயில் நிலையம் இல்லாதது கிளாம்பக்கத்திற்கு வரும் பயணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்ன பிரச்சனை ?
கிளாம்பாக்கம் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேல் இல்லாததால், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று நள்ளிரவு என்ன நடந்தது ?
வழக்கத்தைவிட நேற்று நள்ளிரவு திடீரென பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவு வரத் தொடங்கினர். நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், ஆயிரக்கணக்கான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் குடும்பத்தினருடன் மற்றும் குழந்தைகளுடன் காத்திருந்தனர். பொறுமை இழந்த பயணிகள், நள்ளிரவு 1 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மறியலில் பங்கேற்றதால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்
சாலை மறியல் காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோமீட்டருக்கும் மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பேருந்துகளை உடனடியாக இயக்கக் கோரி பயணிகள் காவல்துறையினருடனும் அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.






















