சினிமாவில் வரும் காட்சிகள் போல் , தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் கிட்னி விற்பனை - ஓ.பி.எஸ்
தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் கிட்னி விற்பனை - ஓ.பி.எஸ்

தமிழ்நாட்டில் கிட்னி விற்பனை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திரைப்படங்களில் வரும் நிகழ்வுகள் ;
போதைப் பொருள் விற்பனை, போலி மருந்து விற்பனை, காலாவதியான மாத்திரைகள் விற்பனை, கள்ளச் சாராய விற்பனை என்ற வரிசையில் தற்போது சட்ட விரோத கிட்னி விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. திரைப்படங்களில் வரும் நிகழ்வுகள் எல்லாம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் உண்மை நிகழ்வுகளாக மாறி வருகின்றன.
சமூக வலைதளங்களில் பரவிய தகவல் ;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண்களை பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கிட்னி விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து, பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதி பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைப் பகுதி போன்ற இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கிட்னி அளித்தவர்கள் - போலியான முகவரி ;
இந்த விசாரணையில், திருச்சி, பெரம்பலூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு கிட்னி விற்பனை செய்யப்பட்டதுள்ளதும், கிட்னி அளித்தவர்களின் முகவரி போலியானது என்பதும் நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட வசந்த நகர், காவிரி, ஆவத்திபாளையம், ஆவாரங்காடு போன்ற இடங்களிலும் கிட்னி இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப, தமிழ்நாடு முழுவதும் சட்ட விரோத கிட்னி விற்பனை செயல்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இருக்கும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது
சட்ட விரோத கிட்னி விற்பனை நடைபெறுவதற்கு முக்கிய காரணம் தி.மு.க. அரசின் மோசமான செயல்பாடு என்று சொன்னால் அது மிகையாகாது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டவை. இந்த விதிகள் உறுப்பு விற்பனையைத் தடுப்பதற்கும் , உறுப்புகளை பிரித்தெடுத்தல், சேமித்தல் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கும் உருவாக்கப்பட்டவை. இந்த சட்ட விதிகளின்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் , கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் , இதனைக் கண்காணிக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது அல்லது கண்டும் காணாமல் இருந்து விட்டது என்பது தற்போதைய சட்ட விரோத கிட்னி விற்பனை மூலம் தெளிவாகிறது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, சட்ட விரோதமாக கிட்னி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், சட்ட விரோதமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





















