(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election: குன்றத்தூரில் பிடிக்கப்பட்ட 1425 கிலோ தங்கம்..! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி..!
Kanchipuram: ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி மினி லாரியில் கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்களின்றி மினி லாரியில் கொண்டுவரப்பட்ட 1,425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்.
பறக்கும் படையினர்
தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் ஏழு பறக்கும் படை அதிகாரிகள் கொண்ட குழு தொடர்ந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று குன்றத்தூர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
லாரியில் இருந்த தங்க கட்டிகள்
அப்போது காஞ்சிபுரம் நோக்கி வந்த ஒரு கார் மற்றும் மினி லாரியை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டனர். அப்போது காரில் வந்தவர்கள் லாரியில் தங்க கட்டிகள் உள்ளதாகவும், இதனை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குடோனுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு
பின்னர் அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது போதுமான ஆவணங்கள் இல்லாததால் லாரியை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை அதிகாரிகள் தங்க கட்டிகள் கொண்டு வந்ததற்கான ஆவணங்கள் அனைத்தும் சோதனை செய்த பின்னர் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் மீண்டும் அந்த தங்க கட்டிகள் ஒப்படைக்கப்படுமென வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1425 கிலோ மதிப்புள்ள தங்க கட்டிகள் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடரும் சோதனைகள்
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து , பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு கணக்கில் வராத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது . ஒருபுறம் வியாபாரிகள் இதனால் பாதிக்கப்படுவதாக வியாபாரி சங்கங்கள் புகார் தெரிவித்து வந்தாலும் தொடர்ந்து பறக்கும் படையினரின் தணிக்கை நடைபெற்று வருகிறது. ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் அல்லது விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு ஆவணங்கள் ஒப்படைக்கும் பட்சத்தில் திருப்பிக் கொடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.