Kanal Kannan: பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய கனல் கண்ணன் ஜாமீன் கோரி மனுதாக்கல்
பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது தொடர்பாக கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது குறித்தான வழக்கில், கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என மூன்று முறை கடும் ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.
திராவிட கழகத்தினர் புகார்
இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
கைது:
இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஜாமீன் கோரி மனு தாக்கல்:
ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு திங்கட்கிழமையன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
View this post on Instagram