பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசிய கனல் கண்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல்
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார்.
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக இந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக பல வீடியோ பதிவுகள் பதிவிடப்படுவதாகவும், அவை தொடர்பாக தனி நபர்களும், அமைப்புகளும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது.
மற்றொரு வழக்கு
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களிடம் அரசு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றால், மீதமுள்ள 50 சதவீத மாணவர்களிடம் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் என, தனியார் மருத்துவ கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராமச்சந்திரா, அதிபராசக்தி, பி.எஸ்.ஜி. உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன.
அந்த மனுக்களில், அரசு கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும், தனியார் கல்லூரிகள் 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிப்பது என்பது சாத்தியமற்றது எனவும் அப்படி வசூலித்தால் கல்லூரிகளை நிர்வகிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தனியார் மருத்துவ கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ் முதலில் அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது... இரு பிரிவு மாணவர்களிடம் இரு வேறு கட்டணம் வசூலிப்பது பாரபட்சமானது. அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றார்.
18 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் அரசு, படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஒப்பந்தம் செய்கிறது. அரசு கட்டணத்தை வசூலித்து தனியார் கல்லூரிகளை நிர்வகிக்க முடியாது எனவும் விளக்கினார்.
50 சதவீத மாணவர்களிடம் 18 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றால், மீதமுள்ள 50 சதவீத மாணவர்களிடம் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் எனவும் குறிப்பிட்டார்.
அதிக வசதிகளுடன் ஒரு கல்வி நிறுவனத்தை துவங்கும் போது, அந்த செலவினங்களை கட்டணம் மூலம் தான் சரிகட்ட முடியும் என்றார். வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்