Iskcon Rath Yatra 2023: சென்னை இஸ்கான் நித்தாய் ரத யாத்திரை - எப்போது, எங்கு நடைபெறுகிறது தெரியுமா?
ISKCON Yatra: இஸ்கான் சார்பில் சென்னை பெரம்பூரில் வரும் வெள்ளிக்கிழமை (14.04.2023) மாலை ‘ஸ்ரீ ஸ்ரீ கெளர நித்தாய் ரத யாத்திரை’ நடைபெற இருக்கிறது.
அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் என்றழைக்கப்படும் இஸ்கான் சார்பில் சென்னை பெரம்பூரில் வரும் வெள்ளிக்கிழமை (14.04.2023) மாலை 9-ம் ஆண்டு ‘ஸ்ரீ ஸ்ரீ கெளர நித்தாய் ரத யாத்திரை’ விழா நடைபெற இருக்கிறது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல இடங்களில் பரவியுள்ள இயக்கம் இஸ்கான் என்றழைக்கப்படும் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம். குறிப்பாக, "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" என்ற இஸ்கான் இயக்கத்தின் பக்தி கோஷம் மிகவும் பிரபலமானது. இஸ்கான் அமைப்பின் சார்பில், பல்வேறு நாடுகளில், பல்வேறு சமயங்களில் பல்வேறு ரத யாத்திரை உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படும். அந்த வகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், கடந்த 8 ஆண்டுகளாக கொண்டாடப்படும் "ஸ்ரீ ஸ்ரீ கெளர நித்தாய் ரத யாத்திரை’" இந்த ஆண்டும், வரும் 14-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கேற்ப, சிறப்பு ஏற்பாடுகளை, வட சென்னை பெரம்பூரில் உள்ள அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் கிளை திட்டமிட்டுள்ளது.
‘ஸ்ரீ ஸ்ரீ கெளர நித்தாய் ரத யாத்திரை’:
வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாரதி சாலையில் இருந்து தொடங்கும் ரத யாத்திரை பெரம்பூர் நெடுஞ்சாலை ரோடு வழியாக பேப்பர் மில்ஸ் சாலை, ரெட்டேரி சிக்னல், ரெட்ஹில்ஸ் சாலை வழியாக மாலை 6.30 மணிக்கு லட்சுமி புரத்தில் உள்ள பத்ம ஸ்ரீ சேஷ மஹாலை சென்றடையும். வழிநெடுகிலும், பக்தர்கள் ரதம் இழுத்தும், கீர்த்தனை பாடியும், ஆடியபடி வண்ணமயமான பக்தி பரவசத்துடன் ரத யாத்திரயை நடத்தப்படவுள்ளதாக இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரதயாத்திரையின் போது, பல்வேறு பிரபலங்களும் பக்தர்களுடன் இணைந்து யாத்திரையில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு ஆராதனை:
மாலை யாத்திரைக்கு பின்பு, , பத்மஸ்ரீ சேஷ மஹாலில் கீர்த்தனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. கிருஷ்ணன் - ராதாவிற்கு சிறப்பு ஆரத்தியுடன் பூஜைகள் நடைபெறும். இதோடு, தவத்திரு பானு சுவாமி மகராஜ் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும். ஊர்வலப் பாதை முழுவதும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். அனைவரும் கலந்து கொண்டு கிருஷ்ணரின் அருளைப் பெறுமாறு இஸ்கான் கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் தகவலுக்கு, 9840087057 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். www.iskconperambur.org-ஐப் பார்க்கவும்.