காஞ்சிபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் மோசடி....போலீஸ் விசாரணை.... நடந்தது என்ன..?
220 முக்கிய ஆவணங்கள், 13 ஹார்ட் டிஸ்க், 5 லேப்டாப், 14 செல்போன்கள், 40 சவரன் நகை மற்றும் ஒரு கோடியை 50 லட்ச ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர் கதை
பொதுமக்களுக்கு பொதுவாக பணத்தின் மீது ஆசை என்பது எப்பொழுதுமே இருந்து வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் பல நிதி நிறுவனங்களில் பணத்தை போட்டு ஏமாறுவது தொடர்ச்சியாக உள்ளது. சமீபத்தில் கூட வட தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில், அதே பாணியில் இன்னொரு நிதி நிறுவனமும் பொதுமக்களிடையே மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
திடீர் சோதனை
இன்று காலை முதலே காஞ்சிபுரம் பரபரப்பாக காணப்பட்டது அதற்கு முக்கிய காரணம் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் திடீரென்று நடைபெற்ற பொருளாதார குற்றப்பிரிவு சோதனை. காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. ஐஎப்எஸ், இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற பெயரில் வேலூரை மையமாகக் கொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
ஐ எஃப் எஸ் நிதி நிறுவனம்
இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் 8000 ரூபாய் வட்டியாக தரப்படும், அதேபோல இதற்கு ஒவ்வொரு ஊர்களுக்கும் இந்த நிறுவனம் சார்பாக இயக்குனர் நியமிக்கப்பட்டு கிளை நிறுவனங்கள் திறக்கப்பட்டு பொதுமக்களிடையே பணம் வசூல் செய்து நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் கூலி வேலை செய்பவர்கள், நடுத்தர மக்கள், மகளிர் குழுக்களை மேலும் பெரும் முதலாளிகள் உள்ளிட்டோர் பல்லாயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது . தமிழகம் முழுவதும் இந்த நிறுவனம் பல கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது
இயக்குனர்கள் வீட்டில் சோதனை
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள மின்மினி சரவணன் என்பவர் வீட்டில் ஆய்வு மேற்கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்று இருந்தனர். மின்மினி சரவணன் என்பவர் காஞ்சிபுரம் பகுதியில் ஐஎஃப்எஸ் மேலாளராக இருந்து வருகிறார். மின்மினி சரவணன் மற்றும் அவருடைய வீட்டை சார்ந்தவர்கள் யாரும் இல்லாததால் வீட்டை சிறிது நேரம் சோதனை செய்துவிட்டு, வீட்டிற்கு சீல் வைத்து விட்டு சென்று விட்டனர் .
இதே போல காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதியாக விளங்கும் பூக்கடை சத்திரம் பகுதியில் இயங்கி வந்த அலுவலகத்திலும் சீல் வைக்கப்பட்டது. மேலும் ஜெகன் என்ற மற்றொரு மேலாளர் ராணிப்பேட்டை, நெமிலி பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. அவருடைய வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் எம்.எம். அவென்யூ பகுதியில், சிவானந்தம் என்பவர் வீட்டிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
220 முக்கிய ஆவணங்கள், 13 ஹார்ட் டிஸ்க், 5 லேப்டாப், 14 செல்போன்கள், 40 சவரன் நகை மற்றும் ஒரு கோடியை 50 லட்ச ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை அறிவிப்பு
பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
( eowlnsifscase@gmail.com ). ஆர்பிஐ இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் தங்கள் பணத்தை சேமிக்க/டெபாசிட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்