’சின்ன வெங்காயம் விளைச்சலை சின்னாபின்னமாக்கிய மழை’ - அழுகல் நோயால் வேதனையில் விவசாயிகள்!
’’விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயங்கள் அழுகல் நோயால் கடும் பாதிப்பு’’
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நல்லம்பாக்கம், நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பலர் வெங்காயம் பயிரிட தொடங்கினர். சந்தைகளில் வெங்காயத்திற்கு நல்ல விலை மற்றும் தேவை அதிகம் இருப்பதால் வெங்காயம் பயிரிட்டனர்.
தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மரக்காணம் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் அனைத்தும் அழுக தொடங்கியுள்ளன. மேலும் வெங்காயத்தில் வெள்ளை பூச்சி தாக்கம் அதிகம் இருப்பதால் முதலீடு செய்த பணம் கூட வராத சுழல் ஏற்பட்டுள்ளதாக வெங்காயம் பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்ன வெங்காயம் பெருமளவு தமிழகத்தில் பயிரிடப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது. தற்போது, பயிர் செய்த 40 நாள்களில் வேர் அழுகல் நோயால் பெருமளவு சேதம் அடைந்துள்ளது. இந்நோய் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வெங்காயம் பயிரிடும் பகுதிகளில் காணப்படுகிறது.
இலைப்பேன் தாக்குதல் :
வெங்காயத்தை நான்கு வகையான பூச்சிகளும் இரண்டு வகையான நோய்களும் தாக்குகின்றன. இதில் முக்கியமான பூச்சி இலைப்பேன். நடவு செய்த 10 ஆம் நாளுக்கு மேல் இதன் தாக்குதல் இருக்கும். இது தாக்கினால், வெங்காய தாள்கள் காய்ந்து வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். இது இலையின் நுனியில் உள்ள பச்சையைச் சுரண்டிவிடும். இதனால், தாளின் நுனி கருகிவிடும். இதைப் பலரும் இலைக்கருகல் நோய் என நினைக்கிறார்கள். ஆனால், இது பூச்சியால் ஏற்படக்கூடிய பிரச்னை. பூச்சிவிரட்டிதான் சிறந்த மருந்து. இலையில் பச்சையம் இல்லையென்றால் மண்ணுக்கடியில் வெங்காயம் வளர்ச்சியடையாது. எனவே வெங்காய இலைத்தாள்களை பசுமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை தடுக்க வெங்காயத்தை நெருக்கமாக நடவு செய்யக்கூடாது. அதிகளவு உரமிடக்கூடாது. இவற்றை சரியாக கடைப்பிடித்தும் இலைப்பேன் தாக்குதல் இருந்தால் 10 நாள்கள் இடைவெளியில் கற்பூரக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இரண்டு மில்லி இஞ்சி-பூண்டு கரைசலை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிர்களுக்குத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். அதிக பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்பவர்கள் இருபது வரிசைக்கு ஒரு வரிசை சூரியகாந்தியை நடவு செய்ய வேண்டும். குறைவான பரப்பில் நடவு செய்பவர்கள் வரப்பு ஓரங்களில் சூரியகாந்தியை நடவு செய்யலாம்.
இப்படிச் செய்வதால் இலைப்பேன் பிரச்னையைக் குறைக்கலாம். வெங்காய வயலில் களை இருக்கவே கூடாது. களைச்செடிகளில் இலைப்பேன் இனப்பெருக்கம் செய்யும். 500 கிராம் பூண்டை இடித்துச் சாறாக்கி அதில் 5 மில்லி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து களைச்செடிகளில் வரும் முன் காப்பானாகத் தெளித்தால், இலைப்பேன் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம் என வேளாண் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.