ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் அரவிந்த் ரகுநாதனின் சாதனை! கணினி அறிவியல் மையத்திற்கு பெயர் சூட்டல்
ஆழமான ஆர்வத்தால் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சிகள் மூலம் கணினி அறிவியலின் கணித அடித்தளத்தை மேம்படுத்துவதோடு, நீண்டகால கோட்பாட்டு ஆய்வுகளுக்கான ஒரு சிறந்த அறிவுசார் மையமாகவும் விளங்கும்.

தஞ்சாவூர்: ஐஐடி மெட்ராஸ் - ன் கோட்பாட்டு கணினி அறிவியல் மையத்திற்கு Roc360 நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஐஐடி மெட்ராஸ் - ன் முன்னாள் மாணவருமான அரவிந்த் ரகுநாதனின் பெயர் சூட்டப்பட்டது.
ஐஐடி மெட்ராஸ் (இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னை), அதன் முன்னாள் மாணவரான திரு. அரவிந்த் ரகுநாதன் 'கோட்பாட்டு கணினி அறிவியல் (Theoretical Computer Science) மையத்திற்கு' தாராளமான நன்கொடையை வழங்க முன்வந்திருப்பதை அறிவித்துள்ளது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த மையம், 'அரவிந்த் ரகுநாதன் கோட்பாட்டு கணினி அறிவியல் மையம்' (ARtCS) என அழைக்கப்படும். இது ஆழமான ஆர்வத்தால் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சிகள் மூலம் கணினி அறிவியலின் கணித அடித்தளத்தை மேம்படுத்துவதோடு, நீண்டகால கோட்பாட்டு ஆய்வுகளுக்கான ஒரு சிறந்த அறிவுசார் மையமாகவும் விளங்கும்.

ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, இந்த நன்கொடைக்காக தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தினார். " ரகுநாதனின் தாராள மனப்பான்மையும், ARtCS மையத்தின் மூலம் ஐஐடி மெட்ராஸ் மாணவர்களிடம் அவர் கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும், கணக்கீட்டு அறிவியல் துறையில் புதுமையான ஆராய்ச்சிகளை மேலும் முன்னேற்றமடையச் செய்யும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ரகுநாதன் கூறுகையில், "ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் நான் கல்வி பயின்ற அந்த ஐந்து ஆண்டுகள், என்னுள் தளராத ஆர்வத்தை வளர்த்தன; என் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்திய சிறப்பான ஆண்டுகள் அவை. எதிர்கால சந்ததியினர் கோட்பாட்டு பாடங்களில் தங்களின் அறிவுசார் தேடல்களை மேற்கொள்ள, உலகத் தரம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான அணுகலை ARtCS மையம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
ஒரு சிறப்பான நிகழ்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் - ன் இயக்குனர் பேராசிரியர் காமகோடியால் ARtCS மையத்தின் முறையாகத் திறக்கப்பட உள்ளது. பேராசிரியர் ஷஃபி கோல்ட்வாஸர் (MIT, Weizmann, UC Berkeley), டாக்டர் பிரபாகர் ராகவன் (கூகுள்), பேராசிரியர் வெங்கட் குருசாமி (UC Berkeley), அஷ்வின் மகாலிங்கம் (ஐஐடி மெட்ராஸ்), ஆர். ஆனந்த் (பட்டயக் கணக்காளர்) மற்றும் ரகுநாதன் உள்ளிட்ட புகழ்பெற்ற நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை / வழிகாட்டல் குழுவின் ஆதரவுடன் இந்த மையம் செயல்படும்.
அனைத்து கணக்கீட்டுப் புத்தாக்க செயல்பாடுகளுக்கும் அடித்தளமாக விளங்கும் கோட்பாட்டு கணினி அறிவியலில், ஐஐடி மற்றும் இந்தியாவின் பங்களிப்பை ARtCS வலுப்படுத்தும். இளங்கலை, முதுகலை, முனைவர் (Ph.D.) மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்பு ஆகிய நிலைகளில் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலமும், அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதன் வழியாகவும் இது சாத்தியமாகும். இது கிரிப்டோகிராஃபி, கணக்கீட்டுச் சிக்கல், அல்காரிதம்கள், வரைபடக் கோட்பாட்டு தர்க்கம் மற்றும் தரவுத்தளங்கள், கோட்பாட்டு இயந்திர கற்றல், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் AI-ல் தனியுரிமை / அந்தரங்கம் பேணல் ஆகியவற்றில் அடிப்படை ஆராய்ச்சிகளை இந்த மையம் ஊக்குவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐஐடி மெட்ராஸ், உயர்கல்வி நிறுவனத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்ற பிறகு, ரகுநாதன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) கணினி அறிவியலில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றார். கல்வித்துறையில் சிறிது காலம் பணியாற்றிய அவர், அதைத் தொடர்ந்து கிரெடிட் சூயிஸ் மற்றும் டாய்ச் வங்கி ஆகியவற்றின் பங்கு வர்த்தகப் பிரிவில் பொறுப்பான பதவிகளில் வெற்றிகரமாக செயல்பட்டார். அதன்பிறகு, ஒரு பெரிய ஹெட்ஜ் ஃபண்ட், மற்றும் மிகச் சமீபத்தில் நிதிநுட்பம் / முதலீட்டு மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் இரண்டு நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்களை நிறுவினார்.
Roc360 என்பது குடியிருப்பு ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் சந்தையை மையமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த நிதிச் சேவைகள் மற்றும் முதலீட்டுத் தளமாகும். கடன் உருவாக்கம், அண்டர்ரைட்டிங், சேவை, சொத்து மேலாண்மை, காப்பீடு மற்றும் மதிப்பீடு என முழுமையான தீர்வுகளை ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு வழங்க, இந்நிறுவனம் AI மற்றும் தரவு சார்ந்த பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது.
HouseIQ என்பது வீடு வாங்கும் மற்றும் நிர்வகிக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகும். வீட்டைத் தேடுவது மற்றும் வாங்குவது முதல் அதனை மேம்படுத்துவது, நிர்வகிப்பது மற்றும் மறுவிற்பனை செய்வது வரை ஒரு வீட்டின் முழு வாழ்க்கைச் சுழற்சியிலும் இது செயற்கை நுண்ணறிவு சார்ந்த வழிகாட்டலை வழங்குகிறது. வீடை தேடுவதையும் நிர்வகிப்பதையும் எளிமையான, மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும் விவேகமான தொழில்நுட்பத்தை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். "உங்கள் வீடு. ஒரு அறிவார்ந்த செயலி" (Your Home. One Intelligent App) என்ற இந்நிறுவனத்தின் விருதுவாக்கு இதன் குறிக்கோளை தெளிவாக விளக்குகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















