மேலும் அறிய
தனிமனித அந்தரங்கத்தில் தலையிடும் யூ ட்யூபரை கைது செய்யவேண்டும் - அர்ஜுன் சம்பத்
செப்டம்பர் 6-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல்

அர்ஜுன் சம்பத்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தினால், வைரஸ் தொற்று பரவலாகக், குறைப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில், வைக்க தடை விதித்திருந்தாலும் இந்து அமைப்புகள் தடையை மீறி சிலை வைத்திருந்தன.

இந்நிலையில் தமிழக இந்து மக்கள் கட்சி தலைவரும், நிறுவனருமான அர்ஜுன் சம்பத் இன்று காஞ்சிபுரம் வருகை தந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் கோயில் மற்றும் ஒரிக்கை மணிமண்டபம் உள்ளிட்டவைகளில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், ”இந்து மக்கள் கட்சி சார்பாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட திட்டமிட்டிருந்தோம், தமிழக அரசு சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழக அரசோ, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடைபெறாமல், தடுப்பதற்காக திட்டமிட்டே கொரோனா பரவலை காரணம் காட்டி தடை விதித்துள்ளனர். மற்ற மதங்களில் நடைபெறும் திருவிழாவிற்கு அனுமதி தரும் அரசாங்கம், திட்டமிட்டு அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எதிர்த்துப் போராடுவோம்” என தெரிவித்தார்.

வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் விநாயகர் சிலை வைப்பதற்காக அனுமதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற , பின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும், அதன்பின் அனுமதி தர மறுத்தால் தடையை மீறி, ஆன்மீக அறவழியில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும் என தெரிவித்தார். தமிழக அரசு மத்திய அரசுடன் தொடர்ந்து விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரில், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், விவசாய மசோதாவுக்கு எதிரான தீர்மானம், ஆகியவற்றை இயற்றி சட்டமன்ற நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.


”தமிழகத்தில் சிறுபான்மை பிரிவு எனக் கூறிக்கொண்டு செயல்படும் கல்வி நிலையங்களை அரசுடைமையாக்க வேண்டும்” எனவும், ”தனிமனித அந்தரங்கத்தில் அத்துமீறும் யூடியூபர் மதனை காவல்துறையினர் கைதுசெய்ய வேண்டும். ஒருவரின் அந்தரங்கத்தை வெளிக்கொண்டு வருவதற்காக, மூன்று மாதங்கள் காத்திருந்ததாக அவரே கூறியுள்ளார். மேலும் அவரிடம் 13 வீடியோக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவித்தார். இந்நிகழ்வின்போது பாரதமாதா செந்தில், காஞ்சிபுரம் இந்து முன்னணி நிர்வாகிகள் முத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















