அரசுப் பள்ளிகளில் சேர்க்கை கூடணும்! இனி இதையெல்லாம் பண்ணுங்க - புதிய அறிவுறுத்தல்கள்!
அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை, 7.5% இட ஒதுக்கீடு, காலைச் சிற்றுண்டி, ரூ.1,000 உயர்கல்வி உறுதித் தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை, 7.5% இட ஒதுக்கீடு, காலைச் சிற்றுண்டி, ரூ.1,000 உயர்கல்வி உறுதித் தொ
கை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86வது சட்டத் திருத்தத்தின்படி தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது. மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் தொடக்கக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். எனவே, 5 வயது பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து அரசுப் பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்தித்தாட்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.
தொடக்கக் கல்வி பதிவேடு
- பள்ளிவாரியாக மாணவர்கள் ஏற்கனவே எடுத்துள்ள கணக்கெடுப்பை உறுதி செய்தல்
- ஒவ்வாரு கல்வி ஆண்டிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பை வீடுகள்தோறும் சென்று சரியாகவும் துல்லியமாகவும் எடுத்து தொடக்கக் கல்வி பதிவேடானது ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது.
- இந்த பதிவேட்டில் ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும்.
பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல்
அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதைப் பொது மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.
விழிப்புணர்வு மற்றும் சேர்க்கைப் பேரணி நடத்துதல்
அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் வழிப் பிரிவுகளுடன் தொடவங்கப்பட்டுள்ள ஆங்கில வழிப் பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சார்ந்தும் தமிழக முதல்வர் அறிவிப்பின்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள்
- அரசுப் பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 2௦ சதவீதம் முன்னுரிமை
- 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை
- பெண் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000/-
மேற்படி முன்னுரிமை குறித்த விழிப்புணர்வினை பெற்றோர்களுக்கு, ஆசிரியர்கள் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
அரசு வழங்கிடும் நலத்திட்டங்களை அறியச் செய்தல்
பள்ளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், நான்கு இணை சீருடைகள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், காலணிகள், கிரையான்ஸ், நிலவரைபடம், கணித உபகரணப் பெட்டி, பேருந்து பயண அட்டை, ஆதி திராவிட நல ஊக்கத் தொகை, மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபினர் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை தூய்மைப் பணியாளர்
குழந்தைகளுக்கான ஊக்கத் தொகை, திறனறித் தேர்வு ஊக்கத் தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித்தொகை, கோவிட்-19ல் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித் தொகை, மாற்றுத் திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள் மற்றும் ஊக்கத் தொகை, சத்தான சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல்.
மேலும் உண்டு உறைவிட பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி பள்ளி வழியாக சுவரெட்டிகள் / துண்டுப் பிரசுரங்கள் மூலம் விரிவான விளம்பரம் செய்யப்படவேண்டும்''.
இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.