நிவாரணம் என்கிற பெயரில் ஆண்டு தோறும் செலவு: நிரந்தர தீர்வுக்கு செலவிடலாமே!
சென்னையில் இனி வரும் களங்களில் வெள்ளம் பாதிக்காமல் தடுக்க தமிழக அரசுக்கு எவ்வளவு கோடி நிதி தேவையாக இருக்கும்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் பாதிப்புகளால் பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் 2015 ல் ஏற்படுத்தப்பட்ட வெள்ளம், 2016 ல் தாக்கிய வர்தா புயல் , 2018 ல் டெல்டாவை தாக்கிய கஜா புயல் என அடுத்தடுத்தது பல புயல்களை சந்தித்து ஸ்தம்பித்தது.
அதேபோல், தென் இந்திய கடற்கரை பகுதிகள் கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 300 க்கு மேற்பட்ட புயல்களை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 2010 முதல் 2020 வரை உள்ள காலகட்டங்களில் அரபிக் கடல் ஏழு புயல்களையும், வங்களா விரிகுடா 7 புயல்களையும் கடந்து சென்றுள்ளது.
இத்தகைய புயல்களால் தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பொதுமக்களின் நிலைமையை சரி செய்ய அப்பொழுது ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்கள், தற்காலிகமாக நிவாரண நிதியை வெளியிடுகின்றனர். இந்த நிதி அறிவிப்பால் மக்களின் நிலைமை சரியாகிறதோ ? இல்லையோ ? ஆண்டுதோறும் இந்த மோசமான நிலைமையை தமிழக மக்கள் அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
கடந்த 2015 ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மத்திய அரசிடம் இருந்து 1000 கோடி வாங்கி மக்களுக்கு நிவாரண நிதி வழங்கியதாக தெரிகிறது. அதேபோல், தொடர்ந்து அடுத்தடுத்து வந்த புயல்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நிவாரண நிதிகளை அளித்து வந்துள்ளது. ஆனால், இதுநாள் வரை இந்த நிலைமையை முழுமையாக சரி செய்ய எந்தவொரு அரசும் தீர்வு கண்டறியவில்லை.
கடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு அதிமுக அரசு, சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் நீர் பாதைகள், ஏரிகள் தூர்வாருதல், தேங்கிய நீர்களை வெளியேற்றம் போன்ற துரித நடவடிக்கையில் ஈடுபட்டது. இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் பெரிதாக பயனளிக்கவில்லை.
இதை தொடர்ந்து, கடந்த வாரம் முழுவதும் சென்னையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு இனி வரும் நாட்களில் சென்னையில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து இன்று அரசாணை வெளியிட்டது.
தற்போது, ஆட்சியில் உள்ள திமுக அரசு சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இத்தகைய முயற்சிகள் கைகூடினால் தமிழக அரசுக்கு எவ்வளவு நிதி தேவைப்படும்...? பேரிடர் நிவாரண காலத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு 1000 கோடி வரை நிவாரண நிதியாக பெறுகிறது. சென்னையில் இனி மழைநீர் தேங்காமலும், இந்த முழு நிலைமையையும் சரி செய்ய தமிழக அரசுக்கு சுமார் 3000 முதல் 5000 கோடி வரை தேவையாக இருக்கும் என தெரிகிறது.
தமிழக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை மட்டும் கைகூடினால் அடுத்து வரும் ஆண்டுகளில் சென்னை மக்கள் சந்திக்கும் புயலில் இருந்து தப்பிக்கலாம். ஒரு வேளை இந்த நடவடிக்கையும் பயனளிக்கவில்லை எனில் சென்னை மக்களின் நிலமை இன்னும் மோசமாகிவிடும்.