சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..
Chennai Air Show : விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொது மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Chennai Air Show 2024: சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொது மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, இன்று சென்னை மெரினாவில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. அதன்படி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை, இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு வார காலமாகவே, சென்னை வான்பரப்பில் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
72 விமானங்கள், கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்
மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. அதன்படி, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போன்ற போர் விமானங்கள் . போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Mi-17 மற்றும் பிரசாந்த் LCH (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகசத்தை நிகழ்த்தின. லட்சக்கணக்கான பொதுமக்கள் சாகச நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
சாதனை படைத்த நிகழ்வு
விமானப்படை சார்பில் 21 ஆண்டுகள் கழித்து சென்னையில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றதால் பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் , கலந்து கொண்டனர். சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை காண கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் கலந்து கொண்டு, நிகழ்வு உலகத்திலே அதிக பொதுமக்கள் கலந்து கொண்ட விமான சாகச நிகழ்வாக சாதனை படைத்துள்ளது.
படையெடுத்த பொதுமக்கள்
பொதுமக்கள் ஏராளமானோர் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால், ஏராளமான பொதுமக்கள் சரியான நேரத்திற்கு மெரினா கடற்கரையை அடைய முடியாமல் தவித்து வந்தனர். அதேபோன்று தற்போது லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில், மெரினா கடற்கரையில் இருந்து தங்கள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருவதால், சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.
சென்னை வேளச்சேரி ரயில் நிலையம், ஆலந்தூர் மெட்ரோ நிலையம், சென்னை ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ரயிலில் இடம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து உள்ளனர். இதேபோன்று சாலை முழுவதும் வாகன நெரிசலுடன் காணப்படுகிறது. கூடுதல் ரயில்கள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கி இருக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதேபோன்று போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவலர்கள் விரைவாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு இடங்களில் பேருந்து கிடைக்காததால், பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில், மெரினா கடற்கரை பகுதிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், மெரினா கடற்கரையில் இன்று 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போக சென்னை புறநகர் பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.