Chennai Rain: சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் இடி, மின்னல்.. கொட்டி தீர்த்த கனமழை..
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
கொட்டிய கனமழை:
கோடை காலம் நிறைவடைந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயிலும், மழையும் மாறி மாறி நிலவி வருகிறது. நேற்று பகல் வேளையில் வெயில் சற்றே தலைதூக்கி மக்களை சிரமப்படுத்திய நிலையில், நள்ளிரவில் கனமழை கொட்டியது. இடி, மின்னலுன் பலத்த காற்றும் வீசியது. இதனால். பெரிய மரங்களும் அசைந்தாடின.
வெளுத்து வாங்கிய மழை:
குறிப்பாக வடபழனி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், அண்ணாநகர் மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. அதோடு, அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
தேங்கிய மழைநீர்:
விடிய விடிய பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் உடனடியாக வடிந்துவிட்டாலும், வடிகால் பணிகள் நிறைவடையாத பகுதிகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால், அதிகாலையிலேயே பணிக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதேநேரம், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:
கிண்டி, வேளச்சேரி, திருப்போரூர், மயிலாப்பூர் மற்றும் சென்னையில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
24.06.2023 மற்றும் 25.06.2023: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26.06.2023 மற்றும் 27.06.2023: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
23.06.2023 முதல் 27.06.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.