Chennai Rain | சென்னையில் திடீரென தொடங்கிய மழை.. எத்தனை நாட்கள் தொடரும்?
வடகிழக்கு பருவக்காற்று காரணமாக சென்னையில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியது.
வடகிழக்கு பருவமழை காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சென்னையில் நேற்று காலை சென்னையில் திடீரென மழை பெய்த நிலையில், இன்று காலையிலும் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில், சென்னை முழுவதும் திடீரென சற்றுமுன் முதல் மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், வடபழனி, போரூர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடி வருகிறது. சில பகுதிகளில் சாலைகளிலே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வடகடலோர மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்துள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்