Chennai Rains: சென்னையில் தொடரும் மழை : மூடப்பட்ட சுரங்கப்பாதைகள், மாற்றப்பட்ட வழித்தடம்..! வாகன ஓட்டிகளே உஷார்..
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பெருநகரப் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் குறித்து சென்னை போக்குவரத்துக் காவல் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
கனமழை :
நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், சாலைகளில் தேங்கும் நீர் ஆகியவற்றை அகற்ற மாநகராட்சி துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
போக்குவரத்து மாற்றம் :
அந்த வகையில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து முன்னதாக சென்னை போக்குவரத்துக் காவல் துறை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள் :
வேளச்சேரி சுரங்கபாதை.
மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது:
வேளச்சேரி சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மாநகரப் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் எதுவுமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rain Alert : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரம் :
13.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை :
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.