‘பாதுகாப்பு பணியில் இருந்தபோது மயங்கி விழுந்த உதவி ஆய்வாளர்’ உடனடியாக உதவி செய்து உயிரை காத்த அமைச்சர்கள்..!
உரிய நேரத்தில் உயிரை காக்க உதவி செய்த அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் ஆகியோருக்கு காவல் ஆய்வாளர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்
ஒவ்வொரு ஆண்டும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வான கார்த்திகை தீப திருவிழாவிற்கு அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினரை கூடுதலாக வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் கிரிவலம் செல்லவும், மகா தீபத்தை தரிசிக்கவும் கூடுதல் ஏற்பாடுகள் மாவட்டம் சார்பாக செய்யப்பட்டன.
அதன்படி, அருகே இருக்கும் மாவட்ட காவல்நிலையங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் பந்தோபஸ்த் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிதம்பரம், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட சக போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு முதலுதவி கொடுத்த மருத்துவர்கள் உடனடியாக உதவி ஆய்வாளர் சிதம்பரத்தை வேலூருக்கோ அல்லது சென்னைக்கோ மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தங்களது திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியும், திருவண்ணாமலையில் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தவருமான வருண்குமார் ஐ.பி.எஸ்-க்கு சக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார், உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சிதம்பரத்தை அவசர ஊர்தி வாகனத்தில் ஏற்றி, அதன் முன்னரும் பின்னரும் பாதுகாப்பிற்காகவும், சிரமம் இன்றி அவரை விரைவாக அழைத்து செல்லும் வகையிலும் போலீசாரின் பைலட் வாகனங்களையும் ஏற்பாடு செய்து சென்னைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பியிருக்கிறார்.
அதன்பின்னர், அமைச்சர்கள் நாசர் மற்றும் சேகர்பாபுவை தொடர்புகொண்டு, உதவி ஆய்வாளருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் எஸ்.பி. வருண்குமார் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படி, அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் இருவரும் ராஜீவ்காந்தி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி, உதவி ஆய்வாளர் சிதம்பரத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல் கொடுத்திருக்கின்றனர். அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சுயநினைவின்றி கொண்டுவரப்பட்ட உதவி ஆய்வாளர் சிதம்பரத்தை, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து மருத்துவர்கள் உயிரை காத்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், நேரடியாக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கே வந்து அமைச்சர்கள் சேகர்பாபும், நாசரும் உதவி ஆய்வாளர் சிதம்பரத்தை நலம் விசாரித்தும் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டு சென்றுள்ளனர்.
உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற உதவிய அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் மற்றும் திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமாருக்கு, உதவி ஆய்வாளர் சிதம்பரம் குடும்பத்தினரும், சக காவலர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.