இங்க இருந்த சுரங்கப்பாதை எங்கே..? தண்ணீரில் தத்தளிக்கும் வட சென்னை! மூழ்கிப்போன முக்கிய இடம்!
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்மழையால் வடசென்னை முழுவதும் வெள்ளகாடாக மாறியுள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும். இதனால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 10, 11, 12ம் தேதிகளிலும் தமிழக, ஆந்திர கடற்கரைப் பகுதிகளிலும் 11 மற்றும் 12ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் இதனால், வட கடலோர மாவட்டங்களில் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். எனவே, 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 9-ந் தேதிக்குள் கரை திரும்புமாறும் வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலானா இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் லேசானாது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் கொண்டுள்ளது.குறிப்பாக வடசென்னை பகுதியில் வியாசர்பாடி, திருவிக நகர் போன்ற முக்கிய இடங்களில் மக்கள் வசிக்கும் இல்ல முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள்.மேலும் வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் முழுவதுமே கழிவு நீரும், மழை நீரும் கலந்து மக்களின் இல்லம் முழுவதும் உள்ளதால் மக்கள் தொற்றுநோய் பரவும் ஒரு அச்சமான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள்.மேலும் இந்த பகுதி முழுவதும் கிட்டத்தட்ட 2 அடி முதல் 4 அடி வரை மழை நீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அச்சமான சூழ்நிலையிலேயே மக்கள் இருந்து வருகிறார்கள். உடனடியாக மாநகராட்சி நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வடசென்னை முழுவதுமே பல்வேறு இடங்களில் சாலைகள், தெருக்கள், மக்கள் வசிக்கும் இல்லங்கள், சுரங்கப்பாதைகள் என அனைத்து இடங்களிலும் மழை நீர் கடல் போல் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகுந்த ஒரு அச்சமான ஒரு சோதனையில் இருக்கிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது.. தொடர் மழையால் அனைத்து பகுதிகளுமே தண்ணீர் அதிகளவில் தேங்கி இருப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் ,விரைவில் அனைத்துப் பகுதியிலும் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் கூடுதலாக மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அதிநவீன கருவிகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியையும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என அதிகார தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.