Covid Drill: "1.75 லட்சம் படுக்கைகள் தயார்.. 6 மாதங்களுக்கு மருந்துகள் கையிருப்பு.." அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!
இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒத்திகை நிகழ்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு ஒத்திகை:
தமிழ்நாடு மருத்துவமனைகளில் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில், 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் 1954 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உருமாறிய பிஎஃப் 7 கொரோனா தொற்று பரவல் சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் அதிகரித்து பிற பகுதிகளுக்கும் பரவி வரும் நிலையில், இன்று இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
மருத்துவமனைகளில் ஆய்வு:
அதன் ஒரு பகுதியாக சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகையை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டவாரா, வட்டம் சாரா மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவை எதிர்கொள்வது சம்பந்தமான வழிமுறைகளை உறுதிபடுத்திக்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மருத்துவமனையின் பொறுப்பு அலுவலர்களும் 12 மணி நேரம் அவரவர் சார்ந்த மருத்துவமனைகளை ஆய்வு செய்து மருத்துவ வசதிகளை சரிபார்க்க வேண்டும். எவ்வளவு படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன என்பது குறித்து உறுதிப்படுத்த வேண்டும்.கொரோனா பாதிப்புக்குள்ளானபோது பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் கையிருப்புகள் சோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
1.75 லட்சம் படுக்கைகள் தயார்:
தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரத்தில் சோதனையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து தங்கள் தலைமையிடம் அறிவிக்க வேண்டும். கடந்த 20 நாள்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது. நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 51ஆக உள்ளது. தமிழ்நாடு மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 1954 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. 6 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாடு தயார் நிலையில் உள்ளது என்பதை இந்த மாதிரிப் பயிற்சி மூலம் உறுதிப்படுத்துகிறோம். பிற அரசு மருத்துவமனைகள் அடுத்த 24 மணி நேரத்திலும், தனியார் மருத்துவமனைகள் 48 மணி நேரத்திலும் உறுதிப்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
உருமாறிய பிஎஃப் 7 கொரோனா தொற்று பரவல்
இந்நிலையில் தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா, மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. சீனாவில் உருமாறிய பிஎஃப் 7 கொரோனா தொற்று முழு வீரியத்துடன் தற்போது பரவி வருகிறது. முன்னதாக இந்தியாவில் குஜராத், ஒடிசா மாநிலங்களிலும் இந்த உருமாறிய பிஎஃப் 7 கொரோனா தொற்று பரவியது.
இதனையடுத்து இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் சுகாதார ஒத்திகை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் இன்று சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.
சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா? நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா? உள்ளிட்ட விஷயங்கள் இந்த சுகாதார ஒத்திகையில் கவனத்தில் கொள்ளப்படும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )