Covid19 Update | கொரோனா: மண்டலம் வாரியாகக் குழு அமைத்து தீவிரக் கண்காணிப்பு- சென்னை மாநகராட்சி ஆணையர்
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக அதை மறந்து விட்டார்கள்.
சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை முதல் மண்டலம் வாரியாகக் குழு அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் சென்னை அம்மா மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனைக்கு பிறகு மூவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ‘’இன்றைய ஆலோசனையில் விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அடங்கிய குழு என ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு அமைக்கப்பட்டு அவர்கள் நாளை முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்’’ என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ’’மத்திய அரசு கடிதம் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரானா தொற்று அதிகரிப்பு குறித்துத் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக அதை மறந்து விட்டார்கள். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. 202 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் உள்ளன. முதல் 2 அலை குறைந்ததற்கு பொதுமக்கள் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியதே காரணம். இதுவரை 50 ஆயிரம் பேர் மீது ரூ.105 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ''நாளை காலை முதல் காவல்துறையுடன் , மாநகராட்சி இணைந்து மூன்று வேளையும் அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடுவர். தேவை இல்லாமல் மக்கள் கூடினால் அபராதம் விதிக்கப்படும். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முன் அனுமதி வாங்க வேண்டும்.
5 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். 8 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். நோய்த் தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் அவர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இனிமேல் பொதுமக்கள் நலன் கருதி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அபரதங்கள் அதிகமாக வசூலிக்கப்படும். நாளை கோயில்களுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், அவர்கள் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்'' என்று தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )