Chennai weather update : சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை : 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி,சேலம், கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் கரூர், ஸ்ரீமுஷ்ணம், சீகூர் ஆகிய பகுதிகளில்10 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது. தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வரை காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம். அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த சில வாரங்களாக மழை அவ்வப்போது பெய்து வந்தது. இன்று காலை முதல் சென்னையில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், மதியம் 2 மணியளவில் திடீரென பெய்யத் தொடங்கியது. கருமேகங்கள் சூழ இடி, மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. சென்னையின் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
நுங்கம்பாக்கம், வடபழனி, பாரிமுனை, தி.நகர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வளசரவாக்கம், கோயம்பேடு, அமைந்தகரை, வியாசர்பாடி, ராயப்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், முகப்பேர், ஆலந்தூர் உள்பட பல பகுதிகளிலும் மழை சுமார் 1 மணிநேரம் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் இல்லாவிட்டாலும், இந்த திடீர் மழையால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவான 34 அடியை விரைவில் எட்டிவிடும் என்பதால் அணையில் இருந்து இன்று மதியம் 2 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஏரி கரையோரத்தில் வாழும் மக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், வருங்காலங்களில் சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்பது மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.